இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் எமிஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சிரியத்தையும் உருவாக்கியது.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் சப்டைட்டில் வேலைகளை செய்த ரேக்ஸ் என்பவர் தனக்கான சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் செய்திகள் வெளிவந்த இத்தனை நாட்களுக்கு பின் லைகா நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை தனது சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதில், ”லைகா தயாரிக்கும் படத்திற்கு சப்டைட்டில் பணிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது வழக்கம். அது தொடர்பான தொழில்நுட்ப வசதிகளை நாங்களே வைத்துள்ளோம். ஆனால் ரேக்ஸ் சப்டைட்டில் பணிக்காக ரூபாய் 2 லட்சம் கேட்டார்.
இதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. அவர் செந்த விருப்பத்தின் பேரிலேயே அவர் அப்பணியை செய்தார். சம்பளத்தை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். பணி முடித்துக்கொடுத்த பின்பும் ரேக்ஸ் பழைய தொகையே கூறினார். இதற்கு நாங்கள் உடன்பட வில்லை. இதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு முன்பு பெய்யான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதன் பின் 10 நாட்கள் கழித்து ரேக்ஸை அணுகி ரூ ஒரு லட்சம் கொடுக்க முற்பட்டோம். அது எங்கள் பட்ஜெட்டில் இல்லாத ஒன்று. இருந்தாலும் நல்லெண்ணத்தினால் அந்த தொகையை கொடுக்க முன்வந்தோம். ஆனாலும் அவர் பழைய தொகையே கேட்டார். சந்தை நிலவரப்படி எங்களால் அத்தொகையை கொடுக்க முடியாது.
தற்போது நாங்கள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் தர தயாராக உள்ளோம். ஒரு தயாரிப்பாளர் பல தடைகளை உடைத்து அவர்களது வியர்வையையும் உழைப்பையும் வைத்து படம் எடுக்கிறார்கள்.
ஆனால் ஒரு பொய்யான குற்றச்சாட்டால் அவர்களது நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது எளிது. ஒரு திரைப்படத்தை நிறைவு செய்வதற்கு ஒவ்வொருவரின் செயல் முறை பங்களிப்பையும் நாங்கள் மதிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.