"கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடாகொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை – இன்பச்சக்கரம் சுற்றுதடா அதில் நான் சக்கரவர்த்தியடா...."
என்ற ‘வசந்த மாளிகை’ படத்தின் பாடல் வரிகள் இரவு 10 மணிக்கு மேல் மதுரை கீழவாசல் அலங்கார் திரையங்கில் ஒலிக்க, இளவட்டம் முதல் பெருசுகள் வரை விசிலடித்தபடி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கின்றனர்.
அன்று நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு நாள் (ஜூலை 21), இன்றைய முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படம் வெளியானால் என்ன ஆரவாரம் இருக்குமோ, அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் தன் நடிப்பால் தமிழ்நாடு மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்தவர் மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன்.
தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப்பை உடைத்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். ‘பராசக்தி’ படத்தை பார்த்தவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கும், சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று...
‘பராசக்தி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘புதிய பறவை’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கர்ணன்’, ‘முதல் மரியாதை’ என சிவாஜி நடிப்பை பறைசாற்றும் எத்தனையோ திரைப்படங்கள் இருந்தாலும், சிவாஜி ரசிகர்களுக்கு ‘வசந்த மாளிகை’ என்றுமே ஸ்பெஷலான திரைப்படம்.
மதுவுக்கு அடிமையான ஒருவன், ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலால் அந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வருகிறான். அவன் உயிருக்கு உயிராய் நேசிக்கும் அந்தப் பெண்ணை கரம்பிடித்தானா இல்லையா என்பதுதான் கதை.
மதுவுக்கு அடிமையாகி ஆணவத்தில் அலையும் பணக்காரனாகவும் சரி, காதலில் கசிந்துருகும்போதும் சரி, வசந்த மாளிகை படத்தில் சிவாஜியை ரசிப்பது அலாதியான ஒன்று. சிவாஜி குடிப்பதை தடுக்கும் கதாநாயகியின் மண்டையை உடைத்து விடுகிறார், கோப்பையில் கதாநாயகி ரத்தத்தை நீட்டும் வேளையில் தன் தவறை உணர்ந்து பரிதவிக்கும் காட்சியில் வெவ்வேறு முகபாவனைகள் வெளிப்படுத்தியிருப்பார்.
சிவாஜி கணேசனின் முகபாவனைகளிலும் விழியசைவுகளிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போய் கிடந்தார்கள். ‘புதிய பறவை’ படத்தில் மனைவியை கொலை செய்தது பற்றி நினைக்கும் காட்சியில் தனக்குள் தானே பேசிக்கொள்வார், அப்போது ஒவ்வொரு வசனத்துக்கும் ஒவ்வொரு முகபாவனைகளை வெளிப்படுத்துவார்.
ஒவ்வொரு ஆளுமை பற்றியும் ஒரு செவிவழிச் செய்திகள் உலாவுவது வழக்கம், அதுபோல சிவாஜியை பற்றி ஒரு செவிவழிச் செய்தி உண்டு. சிவாஜி ஒருமுறை ரயிலில் பயணிக்கும்போது ஒரு நபர், உங்களை எல்லோரும் பெரிய நடிகன் என்கிறார்களே, ஏதாவது செய்துகாட்ட முடியுமா என்றாராம், அதற்கு சிவாஜி ஒருபக்க முகத்தை மூடியபடி மற்றொரு பக்க முகத்தை சோகமாக மாற்றி ஒரு விழியில் கண்ணீர் வடித்தார் என்பார்கள். இது சிவாஜி பற்றிய செய்தி என்பதால் நம்பலாம், நடிப்பில் உச்சம்தொட்ட நடிகர் திலகம் அல்லவா அவர்...
ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பு என பலரும் விமர்சித்தனர். இது குறித்து சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ படத்துக்கு கதை எழுதிய யதார்த்த இயக்குநர் மகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகேந்திரன், சிவாஜி நடிப்புக்கு ஸ்கிரிப்ட் எழுத ஆளில்லை என்பதே உண்மை. அவர் ஒரு மகா நடிகன் என கூறியிருப்பார்.
சிவாஜியை இயக்குநர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். சிவாஜி எந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பதை கூறாமல், அண்ணே உங்களுக்கு தெரியாததா, நீங்களே நடிச்சுடுங்க என்பதுதான் பெரும்பாலான இயக்குநர்கள் சிவாஜியிடம் கூறியது என்கின்றார்கள்.
சிவாஜி மறைவின்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ‘வைகைப் புயல்’ வடிவேலு நினைவு கூர்ந்திருப்பார்... 'சிவாஜி இறந்தபோது அவர் ரசிகர் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு, இருந்த ஒரு நடிகனையும் கொன்னுட்டிங்களேடா' என இறுதி ஊர்வலத்துக்கு வந்த அத்தனை நடிகர்களையும் பார்த்து கத்தியிருக்கிறார். நடிப்புக்கு மறுபெயர் சிவாஜி என்பது அந்தக்கால ஆட்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பொதுவாக நடிக்க முயற்சிப்பவர்களை பார்த்து ‘மனசுல பெரிய சிவாஜி கணேசன்னு நெனப்பு’ என கூறும் சொல்லாடல் அதனால்தான் உருவானது.
சினிமா உள்ளவரை சிவாஜி கணேசனின் பெயர் அழியாது. தமிழ்நாடு மக்களின் நாடி நரம்புகளில் ஊறிப்போனவர் சிவாஜி, வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள்களின் புகைப்படத்தோடு அவர் படத்தையும் வைத்து வணங்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கின்றனர். பராசக்தி பட ஹீரோவை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? இன்று அவரின் 93ஆவது பிறந்தநாள்.
இதையும் படிங்க: சிங்கம் 2'வில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!