கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று (அக்டோபர் 29) காலமானார். அவருக்கு வயது 46. இவர் கன்னட திரையுலகின் பழம் பெரும் நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார்.
புனித் ராஜ்குமார் பிறப்பு முதல் இன்று பவர்ஸ்டாராக மாறியது வரை உள்ள வளர்ச்சியை இங்கே பார்க்கலாம்.
சென்னையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பிறந்த புனித் ராஜகுமார், கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் ராஜகுமார் - பர்வதம்மா ராஜ்குமாரின் இளைய மகனாவார். புனித் ராஜ்குமாரின் இயற்பெயர் லோஹித். நடிகர்கள் சிவராஜகுமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் புனித் ராஜ்குமாரின் சகோதரர்கள் ஆவர். அதுமட்டுமல்லாது புனித் ராஜ்குமாருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
சிவராஜ்குமார் நடிகராக அறிமுகமாகி கன்னட ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்தார். ஆனால் புனித் ராஜ்குமார் ஆறு மாத கை குழந்தையாக இருக்கும் போதே தனது தந்தையும் நடிகருமான ராஜ்குமார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். குழந்தை நட்சத்திரமாகவே புனித் ராஜ்குமார் சுமார் 26 படங்களில் நடித்தார்.
அதில், 'பெட்டா ஹுவு' என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். இப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் 'அப்பு' என்னும் படத்தில் நடிகராக அறிமுகமனார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே புனித் ராஜ்குமாரை ரசிகர்கள் 'அப்பு' என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
'அப்பு' படத்தின் ரீமேக்கே சிம்பு நடிப்பில் வெளியான 'தம்'. கன்னடத்திரையுலகில் மக்கள் தனது கதாபாத்திரங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
புனித்ராஜ்குமார் 1999ஆம் ஆண்டு அஸ்வினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு துருதி, வந்திதா என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். புனித் ராஜ்குமார் நடிகராக மட்டுமல்லாது பின்னணி பாடகராவும் தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். கன்னடத்தில் ஒளிப்பரப்பட்ட 'க்ரோபதி' நிகழ்ச்சியை ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.
தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான நேத்ராவதி என்னும் தொடரையும் புனித் ராஜ்குமார் தயாரித்துள்ளார். மேலும் பிஆர்கே என்னும் ஆடியோ நிறுவனத்தையும் புனித் நடத்தி வருகிறார்.
புனித் ராஜ்குமார் மாநில விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருது என திரைத்துறையில் வழங்கப்படும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
புனித் ராஜ்குமார் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டோர் சமூகவலைதளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!