'உழைத்தால் உயரலாம் சரி! யார் உழைத்தால் யார் உயரலாம்?' - பொருளாதார நிலைப்பற்றி இப்படியொரு கவிதை உண்டு. இந்த வரிகளில் உள்ள அரசியலைப் பற்றிப் கலை வடிவில் பேச வேண்டுமானால் அதற்குத் தேர்ந்த ஒரு கலைக்கூட்டணி வேண்டும். நாயகனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்க இயக்குநர் ஜனநாதன், 'லாபம்' படத்தை அட்டகாசமான அரசியலும் கமர்ஷியலும் கலந்த படைப்பாக உருவாக்கிவருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்கக் கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல், உண்மையாகவே கட்டச் சொல்லி விட்டாராம் நடிகர் விஜய்சேதுபதி. அதோடு மட்டுமல்லாமல், படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம். படத்தின் கதை மட்டுமல்லாமல், படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அமைந்துள்ளதில் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் இப்படம் பற்றி இயக்குநர் ஜனநாதன், தன் படத்தின் டைட்டில் 'லாபம்' என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள் எனவும் இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும் என்றார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். நம்மிடமிருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும்தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது என்றும், நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான் என்று ஜனநாதன் கூறினார்.
விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சிக் கொண்ட இந்தியா, ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வருவது எதனால் என்பதை தன்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருப்பதாகக் கூறிய ஜனநாதன், இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னை சர்வதேச பிரச்னை எனவும் அதை இப்படம் விரிவாகப் பேசும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறினார்.
கலையரசன், பிரித்வி, டேனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். டி. இமான் இசையமைத்துவரும் இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வேகமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றுவருகிறது. விஜய்சேதுபதி புரொடக்ஷனும் 7CS என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துவருகின்றன.
இதையும் படிங்க: #THALA60PoojaDay - 4 மணிக்குத் தொடங்குகிறது அஜித் பட பூஜை!