நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் இயக்குநர் கே.வி. ஆனந்த் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர், "ஒரு படத்துக்கு நாம் கதை எழுதுவோம், திரைக்கதை எழுதுவோம். ஆனால் நம் உழைப்பு ஒன்றாகி படமாக வந்தபின், அதற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸை வைத்துதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக நாம் ஒரு காமெடி சீன் பண்றோம். அதற்கு ரசிகர்கள் நாம் நினைத்தபடி சிரிக்கிறார்களா என கவனிக்க வேண்டும். ‘காப்பான்’ படத்தை பொறுத்தவரை, நாங்கள் நினைத்ததைவிட ஆடியன்ஸ் அதிகமாகவே படத்தை ரசித்தார்கள்.
பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்திருப்பது குறித்து கே.வி.ஆனந்திடம் கேட்டதற்கு, "பிரதமர் கதாபாத்திரம் குறித்து எடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இதற்காக டெல்லி சென்று பிரதமர் அலுவலகத்தைப் பார்த்தோம். அவர் பாதுகாப்பு குறித்த பல தகவல்களை சேகரித்தோம். அதன்பிறகே படப்பிடிப்பை தொடங்கினோம்" என்றார்.
"பிரதமர் குடிப்பதுபோல் காட்சி இருப்பது பற்றி கேள்வி எழுப்பியதற்கு, குடிக்கக்கூடாதுனு எதுவும் சட்டம் இருக்கா, அவர் வீட்டுக்குள் நாம் சென்று பார்க்கத் தேவையில்லை. ஆபிஸ்ல பிரதமர் ஒழுங்காதான் இருப்பார். உலகத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் ஒயின் அருந்துவார்கள். அவர்கள் சொந்த வாழ்க்கையில் தலையிடத் தேவையில்லை" என்று கூறினார்.
"விவசாயப் பிரச்னை பற்றி பேசியிருக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, "இது ஆறு வருட கற்பனைக் கதை, இதை எதோடும் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை. அப்படி பொருத்திப் பார்த்தால் சரி, தவறு உங்கள் மீதுதான்" என கே.வி. ஆனந்த் தெரிவித்தார்.