2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரசால் உலகளவில் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவிய இதன் தாக்கம் கடந்த 10 நாள்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் உலக நாடுகளின் அரசுகளும் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றன.
இதற்கிடையில் தமிழ் இணையவாசிகள் சமூக வலைதளத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய 'நாட்டாமை', 'படையப்பா' ஆகிய படங்களை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
கரோனா வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை வைத்து நாட்டாமை படத்தில் விஜயகுமார் ஒரு காட்சியில் வில்லனை ஊரைவிட்டு தள்ளிவைப்பதும், படையப்பா படத்தில் நீலாம்பரி (ரம்யாகிருஷ்ணன்) தனது வீட்டில் உள்ள அறையில் தனியாக இருப்பதையும் வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மீம்ஸ் தற்போது சமூக வலைதளத்தில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற பாரசைட் திரைப்படம் கே.எஸ். ரவிக்குமார் விஜய்யை வைத்து இயக்கிய 'மின்சார கண்ணா' படத்தின் ரீமேக் என இணையவாசிகள் விவாதித்துவந்தனர்.