பப்லோ லரெயின் இயக்கத்தில் நடிகை கிறிஸ்டன் ஸ்டூவார்ட் நடிப்பில் உருவாக உள்ள படம் 'ஸ்பென்சர்'. தற்போது இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், 'லேடி டயானா ஸ்பென்சர்' என்று அழைக்கப்படும் மறைந்த இளவரசி டயானாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.
டயானா-சார்லஸ் தம்பதியினரின் திருமண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டீவ் நைட் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் டயானாவாக நடிக்கும் கிறிஸ்டன் ஸ்டூவார்ட், இக்கதாபாத்திரம் தனக்கு மிகுந்த சவாலானது என்றும், டயானாவைப் போன்று பேசுவதற்காக உச்சரிப்புக்கு பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிறிஸ்டன் ஸ்டூவார்ட் கூறியதாவது, "டயானா கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் சவாலான பகுதி அவரது உச்சரிப்பு. நான் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு முன்பு பேச்சு வழக்கு பயிற்சியாளரை அணுகி அதற்கு என தயாராகி வருவேன். இந்தப் படத்திலும் எனக்கு டயானாவின் உச்சரிப்பைப் பெற சிறப்பு பயிற்சியாளரை அணுகி உள்ளேன்.
அவரைப் போன்ற உச்சரிப்பை பெறுவதற்கு பதட்டமாக உள்ளது. ஏனெனில் டயானாவின் குரலை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இதற்காக நிறைய ஆராய்ச்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் பேச்சு வழக்குகளில் அதற்கென தனி உச்சரிப்பு இருக்கிறது. அது அந்தப் பகுதிகளுக்கே உரிய தனித்துவமான ஒன்று.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது, டயானா குறித்து நன்கு அறிவதற்கு ஒரு வழி. இளவரசி டயானா மக்களுடன் திறந்த, தடையற்ற, நெருக்கமான பரிமாற்றத்தைக் கொண்டிருந்தவர். இதுதான் அவரை மற்ற அரச குடும்பத்தினரிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் இந்தக் கதாபாத்திரம் குறித்து நான் நினைக்கும்போது எனக்குள் உற்சாகமும் ஆர்வமும் வெளிப்படுகிறது" என்று கூறினார்.
ஜுவான் டி டியோஸ், ஜோனாஸ் டோர்ன்பாக், ஜானின் ஜாகோவ்ஸ்கி, பால் வெப்ஸ்டர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இளவரசர் சார்லஸை 1981ஆம் திருமணம் செய்து கொண்ட டயானா 1997ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.