கொச்சி: மலையாள திரையுலகம் மிகவும் மோசமான நெருக்கடியை சந்தித்து வருவதால் படத்தின் தயாரிப்பு பணிகளின் செலவை 50 விழுக்காடு வரை குறைக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கூறுகையில், “தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை பற்றி திரைத்துறையச் சார்ந்த மற்ற சங்கங்களிடம் விரைவில் பேசுவோம். அவர்களும் இதைப்பற்றி நன்கு அறிவார்கள். திரைத்துறை முன்னோக்கி செல்லவேண்டுமென்றால் இதைத்தவிர வேறுவழி இல்லை.
கடந்த 2019ஆம் ஆண்டில் வெறும் 6 படங்கள்தான் திரையரங்குகளில் வெளியாகி நல்ல லாபத்தை பெற்றுத் தந்தன. மற்றபடி சாட்டிலைட் உரிமை, நாட்டின் பிறபகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படத்தை ரிலீஸ் செய்துதான் சமாளிக்க வேண்டியுள்ளது.
ஆனால் தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், படத்தின் தயாரிப்பு பணிகளின் செலவை பாதியாக குறைக்க வேண்டும். மேலும், மற்ற பிராந்திய மொழி திரைத்துறையினரையும் தொடர்புகொண்டு இந்த சிக்கலான சூழலை சமாளிப்பதற்கான முடிவு எடுக்கவுள்ளோம்.
கரோனா பொதுமுடக்கம் காலங்களில் 10 படங்களை வரை ரிலீசுக்கு தயாராக இருந்தன. சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு பணிகள் நிறுத்தப்பட்டன” என்றார்.