கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா(51). காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆயங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றும் இவர், நேற்றிரவு தனது மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அர்ச்சனை செய்யும்படி கூறிய லதாவை அங்கிருந்த தீட்சிதர் தாக்கியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் லதாவை தாக்கிய தீட்சிதர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கடவுளின் சன்னிதானத்தில் ஒரு தீட்சிதர் தரக்குறைவாக நடந்துகொண்ட காணொளியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் புரோகிதம் செய்பவர் பொறுக்கித்தனமாக நடந்துகொண்டால் என்ன பயன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும் கடவுளை, பணியிடத்தை, ஒரு பெண்ணை, பக்தையை, தமிழை, அனைத்தையும் அவமதித்து, சிரத்தையுடன் பணிபுரியும் மற்ற அர்ச்சகர்களும் அவமானத்தை தேடி தந்துள்ள அறிவிலிக்கு கோவிலுக்குள் பணி செய்யும் தகுதி இல்லை என்றும் அவர் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.