சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விவகாரம், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பற்றிய அவதூறுப்பேச்சு, பங்களா இடிப்பு என பல சர்ச்சைகளில் நடிகை கங்கனா ரனாவத் சிக்கினார்.
மேலும் ட்விட்டரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் கருத்துகள் வெளியிட்டதற்காக அவர் மீதும் அவரது சகோதரி மீது தேசத் துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது.
இதனை ரத்து செய்யவேண்டும் எனக்கோரி, கங்கனா மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கங்கனா தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மும்பையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அப்போது அவர் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அலுவலர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தான் உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள, ஹங்கேரி நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'செப்டம்பர் 15ஆம் தேதியுடன் எனக்கு பாஸ்போர்ட் காலாவதியாகிறது. அவசரமாக நான் ஹங்கேரியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். அதில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால்,உடனே ஹங்கேரி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக அதிக அளவில் தயாரிப்பாளர் முதலீடு செய்துள்ளார்.
படப்பிடிப்பு ரத்து செய்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே, என் பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர பாஸ்போர்ட் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் பறந்த விஷால் படக்குழு