ரஜினிகாந்தை சுற்றி சமீபமாக தொடர் சர்ச்சைகள் எழுகின்றன. மேலும், இணையவாசிகள் மத்தியில் அவர் மீம் கன்டென்டாகவும் சிக்கிவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் கட்டட வாடகை பாக்கியில் தொடங்கி பெரியார் விவகாரத்தில் பயணித்து தற்போது சூப்பர் ஸ்டார் வருமானவரி பாக்கியில் வந்து நிற்கிறார்.
2002-2003, 2004-2005ஆம் நிதியாண்டுகளில் ரஜினிகாந்தின் வருமான வரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அவருக்கு 2002-03ஆம் ஆண்டுக்கு ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04ஆம் ஆண்டுக்கு ஐந்து லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05ஆம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் அபராதம் விதித்திருந்தது.
இதனையடுத்து, வருமானவரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும், அவர் மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதாக வருமானவரித் துறை தெரிவித்ததையடுத்து அவர் மீதான வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை தனது நண்பர்களுக்கு கடன் வழங்கியதாக ரஜினிகாந்த் தீர்ப்பாயத்தில் விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 2002-2003ஆம் நிதியாண்டில் இரண்டு கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி வந்தது. இதன் வரி முறையாகச் செலுத்தப்பட்டுவிட்டது. 2004-2005ஆம் நிதியாண்டில் வட்டிக்கு வழங்கிய ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் வசூலாகவில்லை. இதனால் தனக்கு 33 லட்சத்து 93 ஆயிரத்து ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதென அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் இவ்வாறு விளக்கமளித்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, #கந்துவட்டிரஜினி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம், #மக்களுக்காக_ரஜினி என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.