இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'களவாணி'. இப்படத்தில், விமல், ஓவியா, சூரி, சரண்யா, இளவரசன், பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை அதே கூட்டணியுடன் இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார்.
களவாணி படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், களவாணி-2 படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாக சிங்கார வடிவேலன், கம்ரான் ஆகியோர் மீது இயக்குநர் சற்குணம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், 'சிங்கார வடிவேலன், கம்ரான் ஆகிய இருவருக்கும் நடிகர் விமலுடன் பண பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது.
இதனை ஈடு கட்டிக் கொள்ள அவர்கள் இருவரும், நடிகர் விமலைதான் களவாணி -2 படத்தின் தயாரிப்பாளர் என போலி ஆவணங்களை தயார் செய்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து படத்தின் வெளியீட்டுக்கு தடை வாங்கினர்.
இதைத்தொடர்ந்து, களவாணி-2 படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்று சட்டப்பூர்வமாக நிரூபித்ததால் அந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியது. இந்நிலையில், படத்தின் மீதான தடை நீங்கிய பின்னும் அதையே காரணம் காட்டி திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்தர்களிடத்தில் படத்தை வெளியிடாதவாறு பாதிப்பை ஏற்படுத்திவருகின்றனர்.
மேலும், சிங்கார வடிவேலனும், கம்ரானும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து என்னிடம் பணம் பெற திட்டமிடுகின்றனர். இவ்விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து படத்தை வெளியிட உதவுமாறும், எனக்கும், என் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளித்து சிங்கார வடிவேலன், கம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.