நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநர், ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்பவர் நடன இயக்குநர் கலா. இவர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தடம் பதிக்க உள்ளார்.
கலை ஆர்வம் மிக்க துடிப்பு மிகு திறமைகளுக்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அவரது இந்த புதிய கலை வடிவத்தின் நோக்கம். புது திறமைகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் கலா மாஸ்டர் இப்போது ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வரும் ட்ரெண்ட்லௌடு எனும் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ள புத்தம் புது முயற்சிதான் கலா பிளிக்ஸ் டிஜிட்டல் மேடை.
கலா பிளிக்ஸ் சேனலின் தொடக்கவிழா கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது, இந்த விழாவில் நடன இயக்குநர் பிருந்தா, நடிகை குஷ்பூ சுந்தர், நடிகர் ஜெகன், சாண்டி, இயக்குநர் சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் கலா மாஸ்டருடன் நேரலையில் பங்குபெற்று கலா பிளிக்ஸ் எப்படிப்பட்ட வாய்ப்பினை வழங்கவுள்ளது என்பதனை விவாதித்தனர்.
இதுகுறித்து கலா பிளிக்ஸ் தரப்பில் கூறுகையில், "இந்த தளம் திறமையான பலருக்கு புதிய வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். இதில் பல புது நிகழ்ச்சிகளின் மூலம் திறமையாளர்கள் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் குறித்து கலா பிளிக்ஸ் சார்பாக வரும் போட்டிகளின் விவரம் பின்வருமாறு...
சும்மா கிழி:
இது நடனத்தில் திறமையும், ஆர்வமும் மிக்கவர்களுக்கான வாய்ப்பு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். நீங்கள் அனுப்பும் நடனங்களை கலா மாஸ்டரே பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்.
குட்டி ஸ்டோரி:
இது ஓர் குறும்பட போட்டி. கலையுலகில் கால் பதிக்கும் கனவுடன் இருப்பவர்களுக்கான களம். யார் வேண்டுமானாலும் பதிவு செய்து தங்கள் குறும்படங்களை அனுப்பி போட்டியில் பங்கு கொள்ளலாம். பெறப்படும் படங்களை பார்வையிடும் பிரபல இயக்குநர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் வெப்சீரிஸ் அல்லது படம் வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
ஜித்து ஜில்லாடி:
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அப்படி, குடத்தினுள் விளக்காய் இருக்கும் திறமைகளை குன்றின் மேல் விளக்காய் ஒளிரச்செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். எப்படி திறமைக்கு வயது வரம்பு கிடையாதோ அதுபோல் இந்நிகழ்ச்சிக்கும் வயது வரம்பு கிடையாது. எவரெல்லாம் இந்த வாய்ப்பை அழகுற ஆளுகின்றனரோ அவர்களின் தனித்திறமையை கலா பிளிக்ஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துசெல்லும்.
இவை மட்டுமல்லாது பிரபலங்கள பங்கு பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் கலா மாஸ்டர் கலா பிளிக்ஸ் மூலமாக வழங்கவுள்ளார்.
இதையும் படிங்க... திரைப்படமாக உருவாகும் நடிகை மீனா குமாரி வாழ்க்கை வரலாறு!