மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'ராஜமாணிக்கம்' என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அன்வர் ரஷீத். இப்படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'கேரளா கஃபே', 'உஸ்தாத் ஹோட்டல்', '5 சுந்தரிகள்', சமீபத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான 'ட்ரான்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய, முன்னணி இயக்குனராக அன்வர் ரஷீத் வலம் வருகிறார்.
இவர் இயக்குனராக மட்டுமல்லாது, அஞ்சலி மேனனின் 'பெங்களூர் டேஸ்', நிவின் பாலியின் 'பிரேமம்', 'பறவா', உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், அன்வர் ரஷீத் தற்போது முதன்முறையாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். அவரே தயாரித்து இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதாநாயகனாக, 'கைதி' படத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் கதையை சமீபத்தில் வெளியான குஞ்சாக்கோ போபனின் 'அஞ்சாம் பாதிரா' படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து, அர்ஜுன் தாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் அன்வர் ரஷீத்துக்கு நன்றி தெரிவித்து பகிர்ந்துள்ளார். கைதி' படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பைப் பார்த்து பிடித்துப்போய், இப்படத்தில் அவருக்கு அன்வர் ரஷீத் வாய்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.