கடந்த ஆண்டு விஜய் நடிப்பில், அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரத்திற்கு சொந்தமான சென்னை அலுவலகம், வீடுகள் உட்பட 20 இடங்களில், வருமானவரித் துறையினர் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நேற்று முதல் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், திரைப்பட தயாரிப்பாளரும் ஃபைனான்சியருமான அன்புச்செழியனின் மதுரை, சென்னை அலுவலகங்கள், வீடுகள் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது. மதுரையில் 15 கோடி ரூபாயும் சென்னையில் 50 கோடி ரூபாயும் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்பாத்தி அகோரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. இதனால் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம், நேற்று வருமானவரித் துறையினர் நேரில் சென்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் வருமானவரித் துறையினர் அவரை நெய்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அவருடைய பனையூர் இல்லத்தில் வைத்து நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். அங்கு 13 வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும், அவரின் சாலிகிராமம் வீட்டிலும் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் 7 வருமானவரித் துறை அலுவலர்கள் விஜய்யின் பனையூர் வீட்டில், தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இச்சோதனையின் முடிவிலேயே வரி ஏய்ப்பு தொடர்பாக சிக்கிய ஆவணங்கள் குறித்த விவரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மாஸ்டர்' படப்பிடிப்பு நிறுத்தம் - வருமான வரித்துறையினரின் பிடியில் விஜய்