சென்னை அருகே நசரத்பேட்டையிலுள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 உதவியாளர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விபத்து தொடர்பாக, 'இந்தியன் 2' பட இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், காயமடைந்தவர்கள் என அனைவரையும் விசாரிக்க முடிவு செய்த காவல்துறையினர் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்தனர்.
விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், 'இந்தியன் 2' விபத்து தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணைவர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து தொடர்பாக, தலைமறைவாகியிருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை, நசரத்பேட்டை காவல்துறையினர் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.