தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல பாடல்களைப் பாடியவரும் இசையமைப்பாளருமான கண்டசாலா, தமிழில் ‘உலகே மாயம்’, ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘கண்டசாலா’. சிஹெச் ராமா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாடகர் கிருஷ்ணா சைத்தன்யாவும் அவரது மனைவி மிருதுளாவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லக்ஷ்மி நீரஜா தயாரித்துள்ள இப்படம் முடிவை எட்டும் வேளையில், கண்டசாலாவின் மனைவியும் மகனும் இதன் உருவாக்கத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். அதுமட்டுமல்லாது நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் அனுப்பவும் செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ராமா ராவ், ‘கண்டசாலா அவர்கள் போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததுபோல, இந்தப் படத்தை முடிக்க எங்கள் குழு மிகவும் போராடியுள்ளது. எல்லா தடைகளையும் தாண்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம். கண்டசாலா அவர்களின் ஆசிர்வாதம் எங்களோடு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாவூத் இப்ராஹிமால் வாய்ப்பை இழந்த பாடகர் மிகா சிங்?