இளையராஜா இசையில் காலத்தால் மறக்க முடியாத பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இசையுலகில் எஸ்பிபி என்று அழைக்கப்படும் இவர், காதல், காமம், சோகம், தத்துவம், துள்ளல் உள்ளிட்ட உணர்வுகளை தன்னுடைய குரல் வழியே ரசிகனை தாலாட்டியது இவரது குரல். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று பலமொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்பிபி பாடியிருந்தாலும், இசை ராஜாவான இளையராஜாவின் மெட்டில் எஸ்பிபி பாடிய பாடல்களே, அவருக்கு உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தையும், விருதுகளையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. இசை மட்டுமின்றி இருவரும் சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர்.
இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது திரைத்துறையினர் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் இருவரது இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 'எனக்கு பாடல் காப்புரிமை பற்றி தெரியாது. இனிமேல் இளையராஜா பாடல்களை பாடமாட்டேன்' என்று நட்புக்கு மரியாதை கொடுத்தார் எஸ்பிபி.
இந்த சம்பவத்திற்கு பின்னர் எந்த இசைக் கச்சேரிகளிலும் இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடவில்லை. இளையராஜா கச்சேரிகளிலும் எஸ்பிபி பாடவில்லை. எஸ்பிபி இல்லாத ஓர் இளையராஜா கச்சேரியா என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. என்னதான் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை எஸ்பிபி பாடினாலும், பிற பாடகர்கள் இளையராஜா பாடல்களை பாடினாலும், அது என்னவோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது. மனக்கசப்பு நீங்கி இருவரும் மீண்டும் பழையபடி இளையராஜாவும் எஸ்பிபியும் இணைய வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் இளையராஜாவிற்கு தமிழ் சினிமா நடத்திய இளையராஜா-75 நிகழ்ச்சியில் கூட யேசுதாஸ், எஸ்பிபி, ஜானகி போன்ற ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று பாடல்களை பாடவில்லையே என்று ரசிகர்கள் கருத்தை பதிவு செய்தனர். தற்போது மனக்கசப்பு நீங்கி இந்த இரண்டு இசை மாமேதைகளும் ஒரே மேடையில் தோன்றி இசை மழையால் ரசிகர்களை நனைக்க உள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் எஸ்பிபி மீண்டும் பாடுகிறார். இதை உறுதி செய்யும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு செய்யும் இணையதளத்திலும் பாடுபவர்களின் வரிசையில் எஸ்பிபி தொடங்கி யேசுதாஸ், மனோ உள்ளிட்ட அத்தனை பாடகர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மேலாக எஸ்பிபி இல்லாத இளையராஜாவின் இசை அரங்கத்தில், மீண்டும் எஸ்பிபி பாடுவதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.