கடந்த 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு இயக்குநர் ஜெரிமி கிலாப்பின் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம் ’ஐ லாஸ்ட் மை பாடி’ (I lost my body). ஒருபக்கம் தன் உடம்பானது வெட்டப்பட்ட கையுடன் சேரத் துடிக்கும் பயணம். மறுபக்கம் அந்த கையின் உடலுக்கு சொந்தக்காரனான நௌபலின் கதை. இவ்விரண்டு கதைகளின் பிணைப்பே திரைக்கதை.
இந்தக் கை ஏன் வெட்டப்பட்டது? என்பது ஒருபக்கமும், மறுபக்கம், நௌபலின் இருத்தியல் நெருக்கடிகளும் மனத் தேடலைச் சொல்லும் கதையையும் ‘Non linear' முறையில் இயக்குநர் கையாண்டிருப்பார்.
ஒரு அனிமேஷன் திரைப்படம், இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவது மிக அரிதே. பொதுவான கண்ணோட்டத்தில் அனிமேஷன் திரைப்படங்களை குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று சுருக்கும் போக்கு இருந்து வருகிறது. ஆனால், ஜெரிமிக்கு அதில் உடன்பாடில்லை.
'அனிமேஷன் என்பது நீங்கள் கதை சொல்லும் விதம் மட்டுமே, அதை தனி ஒரு 'Genre'ஆகப் பார்க்க அவசியம் இல்லை. கதையும், உணர்வும் மட்டுமே திரைப்படத்திற்கு மிக முக்கியம்' என்று ஜெரிமி ஒரு முறை கூறியிருக்கிறார்.
பகுதி 1 - வெட்டப்பட்ட கையின் தேடல்:
பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மடிக்கை அளவில் வெட்டப்பட்ட கை,அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது..!
முதலில் விரல்களை வைத்து மெல்ல மெல்ல நகர ஆரம்பித்து அதன்பின் விரல்களை வைத்தே ஓடும் பரிணாமத்தை சில நொடிகளில் அடைகிறது.
இவை அனைத்தும் கூறுசெய்யப்பட்ட இன்னொரு கண் விழி முன் நடக்கிறது..!
இப்படித்தான் நௌபலின் வெட்டப்பட்ட கையின் பயணம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து வெளியேறும் கை, பாரிஸின் வாகனங்களுக்கு இடையே பல தரப்பட்ட மனிதர்களுக்கு இடையே தண்டவாளங்களுக்கு இடையே பல உயிரினங்களுக்கு இடையே பயணிக்கிறது.
பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. தன் இருத்தலைக் காத்துகொள்ளவும், தம் உடலுடன் சேரவும் அந்தச் சின்ன மடிக்கைக்கு அவ்வளவு சாகசங்களும், போராட்டங்களும் செய்ய வேண்டியிருந்தது.
பயணத்தில் அந்தக் கைக்கு தன் உடலின் நினைவுகளும்,ஏக்கங்களும் மேகங்களாய் கடந்து போக, அந்தக் கை தனது உடலை நோக்கிய தேடலில் இருந்தது.
ஒரு கையின் ஏக்கமும், உணர்வுகளும் இவ்வளவுப் பாதிப்பு தரும் என்று பார்வையாளர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க முடியாது.
இந்தக் கையின் தேடல் காட்சிகளில் வசனங்கள் ஏதும் இருக்காது. டான் லெவியின் பின்னணி இசை வார்த்தைகளின்றி உணர்வுகளை விவரிக்கிறது. இந்தக் கை, அதன் உடலோடு எவ்வளவு நினைவுகளில் பகிர்ந்திருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியது இயக்குநரின் ’டச்’.
பகுதி 2 - வெட்டப்பட்ட மனதின் தேடல்:
இத்திரைப்படத்தில் மறுபக்கம் ‘Non linear' முறையில் பயணிக்கும் இந்தக் கைக்கு சொந்தக்காரனான நௌபலின் பயணம், பெரும்பான்மையான டீன் ஏஜ் இளைஞர்களின் பிரதிபலிப்பென்று கூட சொல்லலாம்.
பெரும் கவர்ச்சியற்றத் தோற்றம், சிறு வயதிலேயே அன்பையும் உறவையும் இழந்த மனம், பெரும்பாலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவக்கேலிகளுக்கும், கிண்டல் கொடுமைகளுக்கும் ஆளாகும் சராசரியான ஒரு டீன் ஏஜ் பையனின் கதாபாத்திரம்.
நௌபலின் இருத்தல் எண்ணங்கள் மிக பலவீனமாகவே ஆரம்பத்தில் இருக்கும். அவன் வாழ்வில் அவன் தேடுவது அல்லது ஏங்குவது அனைத்தும் அன்பிற்கே.
அவன் வாழ்வில் கேப்ரிலின் வருகைவரை அன்பிற்கான அறிகுறிகளே தெரியாமல் இருக்கும். பீட்சா டெலிவரி செய்யும் வேலையில் இருக்கும் நௌபல், எதேச்சையாக கேப்ரிலை சந்திக்க நேர்கிறது (சொல்லப்போனால் முதலில் கேட்க நேர்கிறது).
35ஆவது மாடியில் தங்கியிருக்கும் கேப்ரிலின் வீட்டிற்கு பீட்சா டெலிவரி செய்யப்போன நௌபல், வரும் வழியில் பீட்சாவைக் கீழே போட்டதால் அது சேதமாகிறது.
அந்த சேதமான பீட்சாவைப் பற்றி கேட்காமல் 35ஆவது மாடியில் இருந்த கேப்ரில் கீழ் தளத்தில் பீட்சாவுடன் இருக்கும் இவனைப் பற்றி விசாரிப்பது நௌபல் வாழ்வில் நடந்த மிக அறிய விஷயம்.
வெளியே பெய்யும் மழை நிற்கும் வரை, 35ஆவது மாடியில் இருக்கும் கேப்ரிலுக்கும் கீழ் தளத்தில் இருக்கும் நௌபலுக்கும் இடையே நடக்கும் உரையாடலிலும் காட்சி அமைப்பிலும் அவ்வளவு கலைத்துவம்.
மறுநாள் தனக்கு கிடைத்த ஒரே அன்பு அறிகுறியை நோக்கி நௌபல் தேடிச் செல்கிறான். சில திரைப்படங்களில் மட்டுமே ’Stalking' எனும் செயல் காதலின் ஒரு பகுதியாக அழகுற கையாளப்பட்டிருக்கும். இத்திரைப்படத்தை அவற்றினுள் சேர்த்துக் கொள்ளலாம். தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் தன் அடையாளத்தை மறைக்கிறான்.
அவளிடம் பழகுகிறான், அதன் பின் உண்மையைச் சொல்ல முயலும்போது அது முறிவில் முடிகிறது.
தனக்கான கடைசி அன்புத் துருப்புச்சீட்டை இழந்ததைத் தாங்காத நௌபல், கோபம் அடைகிறான். அந்தக் கோபத்தின் விளைவில்,அவன் கை வெட்டப்படுகிறது,ஏறத்தாழ அவன் மனம் வெட்டப்பட்ட பின்.
பகுதி 3 - நௌபல் பிடிக்க நினைத்த ’ஈ’
இந்தத் திரைப்படத்தில், ஆரம்பக் காட்சியில் இருந்தே ஒரு ‘ஈ’ படம் முழுவதும் வந்து போகும். நௌபல்,சிறு வயதில் அந்த ’ஈ’யைப் பிடிக்க ஆசைப்பட்டிருப்பான். அதை எப்படி பிடிப்பது என்று அவன் அப்பாவிடம் ஆரம்ப காட்சியில் கேட்பான்.
நௌபல் தன் வாழ்வில் ஒவ்வொரு இழப்பைச் சந்திக்க நேரிடும் போது அந்தக்காட்சிகளில் இந்த ’ஈ’யும் இடம்பெற்றிருக்கும். இதில், இயக்குநர் ஜெரிமி, ஈயை உருவகப் பொருளாக கையாண்டுள்ளார்.
அந்த ஈ தான் வாழ்வின் இருத்தலின் அர்த்தம்..! அதைக் கடைசி வரை பிடிக்க முடியாத நௌபல், அது தான் வாழ்வின் அர்த்தமென்று ஏற்றுக்கொள்கிறான் என்று இயக்குநர் சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம்.
நௌபல் இறுதியில் தனக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை, இருத்தல் நெருக்கடிச் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் புரிதல் மூலம் கடக்கிறான்.
இறுதிப்பகுதி - தேடலின் முடிவு
இப்படத்தின் முடிவில் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் எழலாம். இயக்குநரின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்கும். இந்த இருதேடலின் முடிவுகளில் புரிவது ’நிஜத்தை ஏற்றுக்கொள்வதே அதன் கோரத்தைக் கடக்க ஒரே வழி’ என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இத்திரைப்படத்தின் முடிவில் இரு தேடல்களின் இலக்குகளும் அவைகளுக்கு கிடைக்காமல் இருப்பினும் அதுவே வாழ்வின் ரகசியம்.
இறுதிக் காட்சியில் நோஞ்சானாக படம் நெடுக காட்டப்பட்ட நௌபல் உண்மையை ஏற்றுக்கொண்டு விதியைக் கடக்க முயலும் போது ஹீரோ ஆகிறான்.