சிறுவயது முதலே பல்வேறு நாடகங்களில் நடித்து பின்னர் 1994ஆம் ஆண்டு வெளியான ‘நார்த்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்கார்லெட் ஜொஹன்ஸன். தொடர்ந்து மேனி&லோ, தி ஹார்ஸ் விஸ்பெரர், கோஸ்ட் வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அவர் பிரபலமானார்.
தொடர்ந்து, மார்வெல் சினிமாட்டிக் உலகத்தில் ப்ளாக் விடோவாக ஸ்கார்லெட் வலம்வந்தார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்த ஸ்கார்லெட், தற்போது உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சமீபத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் காலின் ஜோஸ்ட்டை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு தன் நடிப்பில் வெளியான மேரேஜ் ஸ்டோரி (marriage story), ஜோஜோ ராபிட் (Jojo Rabbit) ஆகிய படங்களில் குழந்தைகளின் அம்மாவாக நடித்த கதாபாத்திரங்கள் குறித்து தற்போது ஸ்கார்லெட் ஜோஹன்சன் மனம் திறந்துள்ளார்.
அதில், "நான் குழந்தைகள் குறித்தான படங்களில் முன்பு நடித்தது இல்லை. சமீபத்தில் நான் திடீரென 10 அல்லது 11 வயது கொண்ட குழந்தைகள் உள்ள படங்களில் நடித்துள்ளேன். இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது.
இந்தப் படத்திற்காக நான் உடனடி பெற்றோராக மாறவேண்டியிருந்தது. நடிகர்களாகிய நமக்கு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பாதைகள் பல உள்ளன. நான் ஒரு அன்னையாக இருப்பது விலைமதிப்பற்றது. இது எனக்கு இந்தப் படங்களில் நடிக்கும்போது பெரும் உதவியாக இருந்தது.
ஜோஜோ ராபிட்டில் ரோசி கதாபாத்திரத்தில் நடித்தபோது ஒருவித பச்சாதாபம் கொண்டிருந்தேன். அன்பான மகிழ்ச்சியான அதே நேரத்தில் கண்டிப்பான தாயாக நடித்தேன். இது பற்றி நான் ஒரு கட்டுரை எழுதினால் அது என் வாழ்நாளில் விலைமதிப்பற்ற பகுதியாகும் என நிச்சயம் சொல்வேன்" என்று கூறினார்.
எழுத்தாளர் கிறிஸ்டின் லியூனென்ஸின் ’கேஜிங் ஸ்கைஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு ’ஜோஜோ ராபிட்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஜோஜோ என்ற தனிமையான ஜெர்மன் சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட்ட இந்தப் படம், சிறந்த படம், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு சென்ற ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.
அவற்றுள் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஜோஜோ ராபிட்' திரைப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.