சென்னை: தனது சக்களத்தியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இருப்பதாக ’நான் சிரித்தால்’ சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ கூறினார்.
இயக்குநர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த வாரம் வெளியான படம் நான் சிரித்தால். துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆதி நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான நடிகை குஷ்பூ பேசியதாவது:
இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. அவ்னி மூவிஸ் என்பது எனக்கும் சுந்தர்.சி.க்குமான கனவு. எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். சினிமாவை நாங்கள் இருவரும் நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம்.
ஆதி எங்கள் குடும்பத்துக்குள் வந்தது எனது இரண்டாவது மகளால்தான். அவள்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியை அறிமுகப்படுத்தினாள்.
எனக்கு சக்களத்தி ஆதிதான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால், நேரம் காலம் பார்க்காமல் இரவு 2 மணியானாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றைச் சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.
என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருப்பது எனது கணவர்தான். இவ்வாறு அவர் பேசினார்.