வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மாநாடு'. எஸ்ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, யுவன், ஒய்ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், சுரேஷ் காமாட்சி, திருப்பூர் சுப்பிரமணியன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி 25 நாள்களை கடந்துள்ள நிலையில், வெற்றி விழாவைப் படக்குழுவினர் கொண்டாடினர்.
அப்போது பேசிய எஸ்ஜே.சூர்யா, "மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் கூட்டம் கூட்டமாக படம் பார்த்தனர். நல்ல படம் வெல்லும் என்பதை மாநாடு நிரூபித்துள்ளது.
எங்கெங்கோ சுற்றித்திரிந்த எனக்கு நல்லதொரு அங்கீகாரம் இப்படம் தந்துள்ளது. எனது வசனம் குழந்தைகளிடம் எல்லாம் சென்றடைந்துள்ளது மகிழ்ச்சி. இதுதான் எனக்கு கிடைத்த விருது'' எனத் தெரிவித்துள்ளார்.
சிம்புவிற்கு மாநாடு திருப்புமுனை
தொடர்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், "இது நிஜமான வெற்றி. வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. ஒரு படத்தின் முதல் வெற்றி இயக்குநருக்கு தான். இந்த வெற்றியைக் கொண்டாட இப்படத்தின் நாயகன் வந்திருக்க வேண்டும். இந்தப் படம் சிம்புவிற்கு பெரிய திருப்புமுனை" எனக் கூறினார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "இந்த வெற்றியில் நானும் இருப்பது மகிழ்ச்சி. ஓடிடியில் பல்வேறு மொழித் திரைப்படங்களை பார்த்து பழகியதால், மக்கள் இப்படத்தைப் புரிந்து கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
விழாவில் பேசிய வெங்கட் பிரபு, "மாநாடு படம் பல்வேறு தடைகளைத் தாண்டி எடுக்கப்பட்டது. முதலில் சாதாரண கதையாகத் தொடங்கிய பின்னர், டைம் லூப் கான்செப்ட் உள்ளே வந்தது. படத்தைக் கைவிட்டுவிட்டு வேறு கதையை தயார் செய்தோம். கரோனா காலத்தில் நிறைய ஆட்களை வைத்து எடுப்பது சிரமமாக இருந்தது.
பின்னர் சிம்பு, மாநாடு படத்தையே எடுக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. எடிட்டர் பிரவீனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹே சினாமிகா.... அடுத்த ஆண்டு வரும் துல்கர் சல்மான் படம்