இன்றைய இணைய உலகில் போர்க்களத்தில் மலரும் பூக்களைப் போல, அழுத்தங்களுடன் வாழ்வை நகர்த்தும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை விதைத்துவிட்டு செல்வது மீம்ஸ்களே. இப்படிப்பட்ட புன்னகைகளின் புகலிடமான மீம்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் வடிவேலு.
பிரதமர் முதல் பிளாட்பாரத்தில் வசிப்பவர்வரை என அனைவரையும் கலாய்த்து உருவாக்கப்படும் மீம்ஸ்களில் மூன்றில் ஒன்று, நடிகர் வடிவேலு நடித்த காட்சிகளைக் கொண்டே உருவாக்கப்படுகிறது.
ஸ்டுடியோ வாசலில் முதல் நடிப்பு
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடிகர் வடிவேலுவுக்கு, பள்ளிப்படிப்பு எட்டாக்கனியாகவே இருந்தது. இருப்பினும் நாடகங்கள் பார்ப்பதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்ட வடிவேலு, தனது நண்பர்களுடன் இணைந்து அரங்கேற்றிய நாடகங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்தார்.
இவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, வறுமையில் வாடிய குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக, ஆரம்ப காலத்தில் புகைப்படங்களுக்கு ஃபிரேம்கள் செய்யும் கடை ஒன்றில் பணியாற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக கிடைத்த நடிகர் ராஜ்கிரணின் அறிமுகத்தில் உதித்த ஒற்றை நம்பிக்கையை பற்றிக்கொண்டு, திரைத்துறையில் தடம் பதிக்கும் கனவுகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டார் வடிவேலு.
பேருந்து கட்டணத்திற்கு பணமின்றி, லாரியில் பயணித்து ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தவரின் முதல் நடிப்புக்கு கிடைத்த கைதட்டு, ஏவிஎம் ஸ்டுடியோ வாசல் காவலாளியுடையது. வாசல் காவலாளியிடம் நடித்துக்காட்டி பாராட்டைப் பெற்று, ஒருவழியாக ஸ்டுடியோவின் உள்ளே நுழைந்தார் வடிவேலு.
தன்னைத் தானே கிண்டல் செய்த வடிவேலு
அதன்பின்னர் சில கிடைத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு வாழ்வை நகர்த்திக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் வாய்ப்பளித்தார் நடிகர் ராஜ்கிரண். தனது முதல் திரைப்படத்திலேயே ஓர் காமெடியனாகவும், ”போடா போடா புண்ணாக்கு” பாடல் மூலம் பாடகனாகவும் அறிமுகமாகி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் வடிவேலு.
வடிவேலு சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில் நடிகர் கவுண்டமணியும், செந்திலும் தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத துருவங்கள். ஆனால், அவர்களின் காமெடி காட்சிகள் பெரும்பாலும், பிறரை உருவ கேலி செய்வதாகவே அமைக்கப்பட்டிருக்கும் என்ற கூற்றும் உண்டு.
ஆரம்ப காலங்களில் கவுண்டமண், செந்திலுடன் இணைந்து நடித்த வடிவேலு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்க்ரீனில் தனியாக தெரிய ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி, வடிவேலுவின் பாணியோ தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்ளும் காட்சிகளுடன் அமைந்திருந்தது.
ஜில், ஜங், ஜக்...
ஆரம்ப காலத்தில் உடல் அசைவுகளாலும், அவ்வப்போதைய நடனத்தாலும் கறுப்பு நாகேஷ் என அழைக்கப்பட்ட வடிவேலு தனக்கென்ற ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதில் தீர்மானமாக இருந்தார்.
அதன்படி தேவர் மகன், பொற்காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் கிடைத்த குணச்சித்திர காட்சிகளிலும் நடித்து, காண்போர் கண்களை கலங்கடித்து தன்னை மாறுபட்ட நடிகனாக மிளிரச் செய்தார்.
சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் மூலமாகவே தனியொரு ஆளாக காமெடியனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நாயகன் பிரபுதேவாவுடன் இணைந்து வடிவேலு அடிக்கும் லூட்டிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. ”ஜில், ஜங், ஜக்” என பெண்களை அவர் வகைப்படுத்தும் காட்சிகள் இன்றைய இளைஞர்களிடையேயும் பிரபலம்.
காப்பாத்த வந்தியாடா சகல?
அதனைத் தொடர்ந்து தனது 50ஆவது திரைப்படமான முத்து திரைப்படத்தில், குடித்துவிட்டு அலப்பறை செய்யும் மேடைக் கலைஞனாக நடித்தார் வடிவேலு. அதில் இடம்பெறும் காட்சி ஒன்றில், ”ஏன்பா டிரைவர் காருக்கு எதுக்கு அச்சாணி?” என்ற வசனம் இடம்பெறும் காமெடி காட்சிகளைக் கண்டு வடிவேலுவை மெச்சாதவர் எவருமல்ல.
வி.சேகர் இயக்கத்தில் வெளியான ”காலம் மாறி போச்சு” திரைப்படத்தில், மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்த வடிவேலு, “30 ஓவா காச கொடுத்துட்டு, ஆஃப்ட்ரால் ஒரு சமையல்காரன் முன்னால என்ன துவைக்க சொல்லுவ, பெருக்க சொல்லுவ” என கோவை சரளாவிடம் அவர் பேசிய டயலாக்கும் இதே படத்தில் இடம் , ”உள்ள போட்டு குத்துராயா, அந்த குத்து குத்துரா.. காப்பாத்த வந்தியாடா சகல...” என்பதும் இன்றளவும் ஹிட்.
துபாய்ல நம்ம இருந்த ரேஞ்சுக்கு...
நடிகர் பார்த்திபனுடன் வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் இவர் இணைந்து நடித்த, ”துபாய் ரிட்டர்ன்” கதாபாத்திரம் காலத்தால் அழியாதது . ”துபாய்ல நம்ம இருந்த ரேஞ்சுக்கு...” என வடிவேலு பேசும் காமெடி வசனங்களே, இன்றளவும் உள்ளூரில் பெருமை பீற்றிக்கொண்டு திரியும் பலரையும் பங்கம் செய்கிறது.
பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் உருவான ,”எடக்கு, மடக்கு? எள்ளுனா எண்ணெய்யா வருவேனே, கைய காலா நினைச்சு கேக்குறேன்...?” போன்ற காமெடி காட்சிகள், இந்த கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.
ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து, தனது நகைச்சுவையை காண்போரை சிரிக்க வைத்தே சிதறடித்த வடிவேலு தனது கால்ஷீட்டுக்காக சூப்பர் ஸ்டார் முதல்கொண்டு பலரை காத்திருக்க வைத்திருக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
சண்டைல கிழியாத சட்டையா?
வடிவேலுவின் காமெடி காட்சிகளுக்காகவே திரையரங்கில் ஓடி லாபம் கொழித்து தயாரிப்பாளரை வாழ வைத்த படங்கள் ஏராளம். வின்னர், மருதமலை, கிரி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
”வின்னர்” படத்தில் பென்சிலில் மீசை வரைந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவன் கைப்பிள்ளையாக வடிவேலு நடித்து வெளியான காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இந்த படத்தில் ”சண்டைல கிழியாத சட்ட எங்கயிருக்கு?... போங்க தம்பி” என இவர் பேசும் வசனங்களே, பெண்களிடம் பேச முயற்சித்து பல்பு வாங்கும் இன்றைய 90’ஸ் கிட்ஸ்களின் மோட்டிவேட் டயலாக்.
பழமொழிகளும், சொலவடைகளும் ஆக்கிரமித்திருந்த இளைஞர்களின் அன்றாட வாழ்வியலை, தற்போது வடிவேலுவின் திரை வசனங்களே ஆக்கிரமித்துள்ளன. இவரது வசனங்களை தங்கள் வாழ்வில் பொருத்தி பார்த்து, சிரித்து நகர்வதே இன்றைய இளைஞர்களின் வேலையாகி இருக்கிறது..
பேட்டா எங்கமா தராணுங்க?
அரசு படத்தில் இடம்பெறும் ”பேட்டா எங்கமா தராணுங்க? பொங்கலையும், புளியோதரையும் போட்டு கழிச்சுப்புடுரானுங்க...” என்பதே, இன்றும் பல தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பல இளைஞர்களின் ஃபேவரைட் வசனம்.
தீப்பொறி திருமுகம், புல்லட் பாண்டி, திகில் பாண்டி, ஸ்நேக் பாபு, பாடிசோடா என வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், காமெடி சரவெடியாக வெடித்துச் சிதறி, சிரிப்பலைகளை பரப்பின. காமெடி உலகில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவின் வாழ்வில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் ”இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”.
முதன்முறையாக இரட்டை வேடங்களில், கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் சிரிப்பலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு கரகோஷங்களை எழுப்பச் செய்தது. அதனைத் தொடர்ந்து கோடம்பாக்க இயக்குநர்களின் கூடாரங்களில், வடிவேலுவுக்காகவே திரைக்கதைகள் உருவாக தொடங்கின.
வாய்ப்பின்றி வீட்டில் முடங்கிய வடிவேலு
இந்நிலையில் வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருந்த வடிவேலுவின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிக்கொள்ளும் வகையிலேயே அவரது அரசியல் பிரவேசம் தொடங்கியது. நடிகர் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட வெறுப்புகளை திமுக ஆதரவு பரப்புரை மேடைகளில் காரசாரமாக பேசினார் வடிவேலு.
அதன் பின்னர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்ததையடுத்து, அவரது வீடு, அலுவலகம் ஆகியவை தேமுதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டது.
நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பளித்தால் திரைப்பட வெளியீட்டில் சிக்கல் நிகழும் என தயாரிப்பாளர்கள் எண்ணும் அளவுக்கான பிம்பங்கள் அவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்தன. அதனால் வாய்ப்புகளின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார் வடிவேலு. இடையிடையே அவர் நடித்த கத்திச் சண்டை, எலி உள்ளிட்ட படங்களும் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடவில்லை.
ரீ- என்ட்ரி கொடுக்கும் வடிவேலு
இதற்கிடையே இயக்குநர் சங்கர் தயாரிப்பில், ”இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். ஆனால், சங்கருடன் ஏற்பட்ட மோதலில் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மேற்கொண்டு படங்கள் நடிக்க ரெட் கார்டு தடை போடப்பட்டது.
மக்களை மகிழ்வித்த மகத்தான காமெடி கலைஞன் இனி எப்போதும் திரைப்படங்களில் நடிக்க முடியாது என அனைத்து தரப்பினரும் வருத்தப்பட தொடங்கினர். அந்த எண்ண ஓட்டத்தை தற்போது முறியடிக்கும் வகையிலேயே, தனது பிரச்சினைகள் அனைத்தும் முடிவுற்றதால் மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு
காமெடி உலகில் கால்தடம் பதித்து, காலத்தால் அழியாத கலைஞனாக உருவெடுத்த நடிகர் வடிவேலு, இன்று (செப்.12) தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இனிதாய் தொடங்கிய இந்த பிறந்தநாளைப் போலவே, இனிவரும் காலங்களில் நடிகர் வடிவேலுவின் திரைப்பயணமும் தடங்களின்றி அமைய வேண்டும். மதுரை மைந்தனின் புகழ், இனி மல்லிகை வாசமாய் திக்கெட்டும் பரவட்டும். ரசிகர்களின் சிரிப்பலை மழையாய் பொழியட்டும்.
ஹேப்பி கம் பேக் காமெடி கிங்!
இதையும் படிங்க: வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்!