சென்னை : ஆந்திரா மாநிலத்தில் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 28இல் வித்யா ராவ் - ஈஸ்வரி ஹைதரி என்பவர்களுக்கு மகளாக பிறந்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அதிதி ராவ்வின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில்தான் தொடங்கியது.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீரங்கம்' படத்தில் வேசியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இவர் திரைக்கு நடித்த முதல் படம் தமிழானாலும், 2006இல் திரைக்கு வந்த இவரது முதல் படம் மலையாளத்தின் 'பிரஜாபதி' ஆகும். பின் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார்.
இவர், 2011ஆம் ஆண்டு ஏஹ் சாலி ஜிண்டகி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு ராக்ஸ்டார் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.
பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பின் 2017இல் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து பலரால் அறியப்பட்டு பிரபலமானார். இந்தப் படத்தினை தொடர்ந்து 2018இல் இவர் நடித்த செக்க சிவந்த வானம், பத்மாவதி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
2020இல் நடிகை அதிதி ராவ் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மிஸ்கின் இயக்கிய இந்தப் படத்தில் இவரின் நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. அதிதி பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார்.
இவர் தனது 35ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : புனித யாத்திரை, ஃபாரின் டூர்... - மன அழுத்தத்தைப் போக்க பயணம் மேற்கொள்ளும் சமந்தா!