ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திரைப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான ஒரு திரைப்படம்தான் ‘சதுரங்க வேட்டை’. வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்யும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து சேரன் இயக்கிய ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படம் தேசிய விருது பெற்றது. இதுபோன்று சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் வருகிறது.
மண்ணுளிப் பாம்பு, எம்.எல்.எம், இரிடியம் என கோடிக் கணக்கில் பணம் புரள்வதாக ப்ராடு செய்வது தமிழ்நாட்டில் அதிகரித்திருந்த நேரமது, அப்போதுதான் ‘சதுரங்க வேட்டை’ என்ற திரைப்படம் வெளியானது. சிறந்த கேமரமானாக திகழ்ந்த நடராஜனுக்கு (நட்டி) சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுத் தந்தது. படம் பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா, ஓஹோ என புகழத் தொடங்கினார்கள். அடுத்த கேள்வி, யாருப்பா அந்த டைரக்டர், யாரோ ஹெச். வினோத்தாம், இயக்குநர் பார்த்திபன்கிட்ட அசிஸ்டென்டா இருந்துருக்கார், இப்படிதான் ஹெச். வினோத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
சதுரங்க வேட்டை
மண்ணுளிப் பாம்பு
இதன் உடலில் இருந்து ஒரு ஆசிட் வெளியாகிறது. அதன்மூலம் ஆயுதம் தயாரிக்கிறார்கள், ஆண்மைக்கு மருந்து தயாரிக்கிறார்கள் என கதைகட்டி காசு பறிப்பது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அது வெறும் மண்புழு என பர்னிச்சரை உடைத்திருப்பார் ஹெச்.வினோத்.
எம்.எல்.எம்
ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக ஆட்களை சேர்ப்பார்கள், பின்னர் சேர்த்த ஆட்களிடம் புதிதாக ஆட்களைச் சேர்க்கும்படி சொல்வார்கள். அதிகமாக ஆட்கள் சேரச் சேர பணம் கிடைக்கும் என ஆசைகாட்டி, கடைசியாக டாட்டா காட்டிவிட்டு சென்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டிலேயே ஏராளமாக இருந்தன. இதுகுறித்து எம்.எல்.எம் என்ற பெயரில் தெளிவாக விளக்கியிருப்பார்.
இரிடியம் (ரைஸ் புல்லிங்)
தமிழ்நாட்டில் அவ்வப்போது கோயில் கலசங்கள் களவு போகும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு காரணமாக சொல்லப்பட்டதுதான் இரிடியம், கோயில் கலசத்தின் மீது மின்னல் தாக்குவதால் அது இரிடியம் எனும் விலையுயர்ந்த உலோகமாக மாறும், அதன் மதிப்பு பல கோடி என கப்சாவிட்டு கள்ளாக்கட்டிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். அதுவும் அப்பட்டமான ஏமாற்று வேலை என வினோத் காட்சிப்படுத்தியிருப்பார்.
’ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்திருக்கனும், அப்பதான் அது பொய்னு தெரியாது’ என்ற வசனத்தின் மூலம் இந்தப் பொய்கள் எல்லாம் சில உண்மையை ஒட்டியே உருவாக்கப்படுகிறது என்பதை சொல்லியிருப்பார். இதற்கு உதாரணமாக மண்ணுளிப் பாம்பை எடுத்துக்கொள்ளலாம், மண் புழு இனத்தைச் சேர்ந்த இது, பார்க்க பாம்பு போலவே காட்சியளிக்கிறது.
என்னைக்காவது பட்டினியாக இருந்துருக்கிங்களா, காசு இல்லாம பெத்த அம்மாவ அனாதை பொணம்னு கையெழுத்து போட்டிருங்கிங்களா சார் என நட்டி பேசும் வசனம், வறுமையின் கோரப்பிடி ஒரு மனிதனை எப்படி மாற்றும் என்பதை கூறியிருக்கும்.
காசு இல்லாதவன் உடம்ப வச்சு கத்துக்க, காசு இருக்கவன் உடம்ப வச்சு சம்பாதி என மருத்துவத்துறையின் அவலநிலை குறித்து ஒரே வசனத்தில் பேசியிருப்பார். ’சதுரங்க வேட்டை’ திரைப்படம் நிச்சயமாக இந்த சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
இந்த படத்துக்குப் பிறகு வினோத்தின் அடுத்த திரைப்படம் என்ன என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. அந்த நேரம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தின் டீசரே மிரட்டலாக இருக்க, ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதனை நிறைவு செய்யும் வகையில் அந்தப் படமும் அமைந்திருந்தது. ஆப்ரேசன் பவாரியா என்ற சப்ஜெக்ட்டோடு களமிறங்கிய ஹெச்.வினோத், இதிலும் வெற்றிகண்டார்.
‘குற்றப்பரம்பரை’ பற்றி பேசியிருப்பதாக சில காட்சிகளை நீக்கச் சொல்லி குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் புகார் அளித்திருந்தனர். ஆனால், அத்தனை தடைகளையும் தாண்டி ‘தீரன் அதிகாரம் ஒன்று” அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் இடம்பிடித்திருந்தது.
அதன்பிறகு, பாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ மூலம் அஜித்துடன் கைகோர்த்தார் வினோத். இரண்டு படங்கள் நல்ல ஹிட் கொடுத்த இயக்குநர் ஏன் ரீமேக் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் ‘பிங்க்’ போன்ற படத்தை ரீமேக் செய்ததற்காக ஹெச்.வினோத்தை பாராட்ட வேண்டும் என்றார்கள். அஜித்தின் அடுத்த படத்தையும் அவர்தான் இயக்குகிறார். தன்னால் இயன்றவரை சினிமாவுக்கு உண்மையாக இருக்கும் ஹெச்.வினோத் பிறந்தநாள் இன்று, அவரது திரைப்பயணம் தொடர வாழ்த்துகள்.