தமிழில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதைத்தொடர்ந்து பல படங்களில் இசையமைத்த அவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துடன், நினைவில் நிற்கும் பின்னணி இசையும் தந்துள்ளார்.
டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இளைஞர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடித்துவந்தார்.
இந்த நிலையில், தனது ஆஸ்தான இயக்குநர்களின் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த அசுரன் படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தில் இவரது பாடல்கள், பின்னணி இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
இதையடுத்து அசுரன் படத்துக்குப் பின் தான் இசையமைத்து வரும் அடுத்த மூன்று முக்கிய படங்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், அசுரன் படத்துக்குப் பின் சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய வசந்தபாலனின் 'ஜெயில்', சூர்யா நடிக்கும் 'சூரரைப் போற்று' ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் 'தலைவி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ்.