ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூரிலுள்ள தனியார் பள்ளியொன்றின் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கெளதம் மேனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நல்ல கதையம்சத்துடன் 2 அரை மணி நேரத்தில் படம் எடுக்க முடியாது என்று கருதுபவர்கள் வெப் சீரிஸுக்குள் நினைத்தது போல் பல மணி நேரங்கள் பல தொகுப்பாக சுதந்திரத் தன்மையுடன் கதை சொல்ல முடியும் என்றும், உலகம் முழுவதும் பிரபலமான பெரிய திரைப்படக் கலைஞர்கள் வெப் சீரிஸுக்குள் வந்து கொண்டிருப்பதால் இனிமேற்கொண்டு திரைப்பட உலகம் வெப் சீரிஸுக்குள்தான் இருக்கும் என்றார்.
மேலும் திரைப்படக் கட்டுப்பாடுகள், முறையான சென்சார் இல்லாததால் அதிகம் பேர் வெப் சீரிஸுக்குள் வருவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் வெப் சீரிஸுக்குள் செல்லவில்லை, கட்டுப்பாடுகளை இயக்குநர்கள்தான் விதித்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அது அனைவரும் பார்க்க கூடியதாக அமையும் என்றும், வெப் சீரீஸ் என்பது திரைப்படங்களுக்கு மாற்று வகையான வடிவம். இந்த முயற்சி கண்டிப்பாக அனைவரையும் ஈர்த்து வருங்காலத்தில் நிச்சயம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றார்.
நடிகர் சிம்புவை வைத்து தான் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைகதையை தான் எழுதி வருவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க தன்னிடம் கதை இல்லை என்றும் கூறினார். மணிரத்னம் மேற்கொண்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.
குயினுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் முதல் பகுதி முடிவுற்று அடுத்த பகுதி வேறு தளத்தில் அமையும், அடுத்த இரண்டாம் பகுதி வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறினார்.
இதையும் படிங்க: என்ன 'ஜானு' இதெல்லாம் - 96 டீஸர் தெலுங்கு!