நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் 'குட் லக் சகி'. நாகேஷ் குக்குனூர் இயக்கும் இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.
தயாரிப்பாளர் தில் ராஜூ வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ், சுதீர் சந்திர பதிரி தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், "பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், முழுக்க முழுக்க பெண்கள் நிறைந்த குழு பணியாற்றியுள்ளது பெருமையான ஒன்று.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை பத்து மணிக்குப் படத்தின் டீஸர் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'பெண்குயின்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.