'அசுரன்' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிவரும் படம் ‘விடுதலை’. சூரி, விஜய் சேதுபதி இதில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்னும் சிறுகதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிவருகிறது. அச்சிறுகதை மீது விமர்சனம் வைத்து பலரும் இப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் வெற்றிமாறன் தரப்பிலிருந்து இது குறித்து எதுவும் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், விடுதலை படத்தில் கெளதம் மேனன் காவல் துறை அலுவலராக நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை அலுவலராக கெளதம் மேனன் திரையில் ஏற்கனவே நடித்திருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்புப் பணிகளை விரைவாக முடித்துவிட்டு இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கிவிட முடிவுசெய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.