இயக்குநர் ஹரி இயக்கிவரும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துவருகிறார். தற்காலிகமாக AV33 என்று அழைக்கப்படும் இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இதில் வில்லனாக, ’கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த, கருடா ராம் நடிக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் தொடங்கிய நிலையில், சென்னையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கருடா ராம், தனது காட்சிகளை நேற்றுடன் (செப். 5) நிறைவடைந்தது. இதனையொட்டி படக்குழுவினர் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் அவருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து படத்தின் வில்லன் கூறுகையில், ”கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு நிறையப் படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் இதுபோல் எந்த ஒரு படக்குழுவும் என்னைக் கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இயக்குநர் ஹரி, படக்குழுவினரை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துவருகின்றனர்.