'மூத்தோன்' படத்தைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது 'துறமுகம்', 'படவெட்டு' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். 'படவெட்டு' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'அருவி' பட நடிகை அதிதி பாலன் நடிக்கிறார்.
இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் கண்ணூர் மாநிலம் காஞ்சிலேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காஞ்சிலேரியில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிந்தபோது அப்பகுதிக்கு காரில் வந்த சில ஆசாமிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த பரோட்டா, சிக்கன் குழம்பு உள்ளிட்டவற்றைத் பாத்திரத்தோடு திருடிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட அமல் என்ற இளைஞர் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது அவரைத் தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பரோட்டா, சிக்கன் உள்ளிட்டவற்றை திருடர்கள் எடுத்துச் செல்வதை அறிந்த படக்குழுவினர் சிலரையும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களின் காரைப் பின்தொடர்ந்து சென்ற படக்குழுவினர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருடர்கள் அங்குள்ள ஆளில்லாத வயல்வெளிக்கு பரோட்டாவைக் கொண்டுசென்று வெளுத்துக்கட்டியுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்கு முன்பே பாதி உணவை சாப்பிட்டுவிட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயேஷ், பிரஜீஷ், ஆதர்ஷ், விஜில் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிவின் பாலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இத்தகைய சம்பவம் நடந்துள்ளது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... 'நான் முஸ்லிம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்' - மதவெறியர்களை தும்சம் செய்த ஷாருக்கான்