ஹைதராபாத்: தெலங்கானா சினிமாஸ் ஒழுங்குமுறை சட்டத்தை மீறியாதாக பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிங்கிள் ஸ்கீரின் சினிமா காலம் மாறி பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒரே திரையரங்கில் பல்வேறு மொழித் திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு விடுதி என வசதிகள் இருப்பதால் பொதுமக்களும் தங்களது நேரத்தை செலவிட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் படையெடுக்கின்றனர்.
கூட்டம் வருகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் காட்சியை சரியாக தொடங்குவதால் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், சில திரையரங்குகளில் சரியான நேரத்தில் காட்சி தொடங்கப்படாமல் தாமதமாக தொடங்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் ஆங்காங்கே எழுகிறது.
ஹைதரபாத் தேபிஎச்பி காலனியில் அமைந்துள்ள மஞ்சீரா மாலில் இயங்கி வரும் சினிபோலிஸ் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கில் காட்சிகள் சொன்ன நேரத்தில் தொடங்காமல், தொடர்ந்து விளம்பரங்கள் ஒளிபரப்பபட்டு 20 நிமிடம் வரை தாமதமாக தொடங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சாய் தேஜா என்ற சமூக ஆர்வலர் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அதில், குறிப்பிட்ட திரையரங்கம் தெலங்கானா சினிமாஸ் ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சினிபோலிஸ் திரையரங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதபோன்று ஹைதராபாத்திலுள்ள மேலும் இரண்டு மல்டிபிளக்ஸ் மீதும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சாய் தேஜா கூறியதாவது,
திரையரங்க நிர்வாகம் தங்களது திரையரங்குக்கு வரும் வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை மதிக்க வேண்டும். சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடிய பின்னரும் விளம்பரங்கள் ஒளிபரப்புவதை தொடர்ந்து சினிமா பார்க்க வருபவர்களை சோதிக்கின்றனர் என்றார்.