சினிமாவில் ஒரே படத்தில் பணம் சம்பாதித்துவிட முடியாது. அதற்கு 3 படங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் 'மரிஜூவானா' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மரிஜூவானா '. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், மிஷ்கின் எனப் பலர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், 'மரிஜூவானா படத்தின் டிரெய்லரில் கமர்ஷியல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதைப் பார்த்தவுடன் நாமும் நடிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தமாக இருந்தது.
சினிமாவில் கேளிக்கை வரி குறித்து இங்கு பேசப்பட்டது. இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அன்றாடம் பிழைப்பு நடத்துவதே சிரமமாக உள்ளபோது, நாம் எப்படிப் போராட்டம் நடத்த முடியும்? வரி விதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை நாம் முறைப்படிதான் அணுக வேண்டும்' என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, 'விழாவுக்கு வந்த கூட்டத்தைப் பார்க்கும்போது வெற்றி விழா போல இருக்கிறது. நான் சினிமாவுக்கு வருவதற்கு பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி என இருவரும் எனக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தவர்கள். பெற்றோர் கூறும் அறிவுரைக்கு அடுத்து வாழ்வை சுவையாக்குவது சினிமாதான். படத் தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், சினிமா இல்லை. சினிமாவில் தயாரிப்பாளர்கள் ஒரே படத்தில் சம்பாதித்துவிட முடியாது. குறைந்தது 3 படங்கள் வரை காத்திருக்க வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: தன்மைக்கும் பண்புக்கும் முழு அர்த்தம் சொன்ன படம் பாரம் - இயக்குநர் மிஷ்கின்