இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இப்படத்தைத் தேசிய விருது பெற்ற பாரம் பட இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், "எங்களது கனவுப் படமான 'பிச்சைக்காரன் 2' படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 'பிச்சைக்காரன்' படத்துக்காக இயக்குநர் சசிக்குதான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை ஈட்டித் தந்ததுதான், இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இரண்டாம் பாகத்தைத் தொடர காரணமாக அமைந்திருக்கிறது.
விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற பாரம் படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தில் இணைந்திருப்பது எங்கள் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மகத்தான படைப்பாக அமைந்த பாரம் மட்டுமின்றி, அவர் உருவாக்கிய 'கங்கூபாய்' மற்றும் 'பெர்ஸி' ஆகிய படங்களும் வித்தியாசமான உருவாக்கத்திற்காக வெகுவாக பாராட்டப்பட்ட படங்களாகும்.
விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் தயாராகும் படம் இது. மேலும் இப்படத்திற்காக விஜய் ஆண்டனி பத்து முதல் பதினைந்து கிலோவரை உடல் எடையைக் குறைக்கக் கடுமையாக செயல்பட்டுவருகிறார்" என்று கூறியுள்ளார்.