நடிகர் தனுஷ் தனது அபார நடிப்பால் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்றடைந்து புகழ்பெற்றுள்ளார். இவர் தற்போது ‘க்ரே மேன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பியிருக்கிறார். இதனையடுத்து அவர் முதல்கட்டமாக கார்த்திக் நரேன் படத்தை முடிக்க இருக்கிறார்.
சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துவரும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 65 விழுக்காடு முடிந்துவிட்டது. இந்நிலையில் மீதமிருக்கும் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ”சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் படம், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் படம் உள்ளிட்டவற்றில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். அத்துடன் 'மாரி' பட இயக்குநர் பாலாஜி மோகன், வெற்றி மாறன் என நடிக்கவிருக்கும் திரைப்பட பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய விருதுபெற்ற டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைந்து, தனுஷ் பணியாற்ற இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்துக்காக தனுஷுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் எஸ். தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும், தனுஷின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கவிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு, ஜூம் மீட்டிங்கில் படப்பிடிப்பை காட்ட ஏற்பாடு நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரின் இந்தப் புது முயற்சியால், தனுஷ் படப்பிடிப்பை காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்த நாள்