சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று(மார்ச்.2) சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சூர்யா, பாண்டிராஜ், சத்யராஜ், சூரி, பிரியங்கா மோகன், இளவரசு, வினய், இமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், 'சூர்யா திரையிலும் நேரிலும் பயமற்றவர். 'ஜெய்பீம்' அருமையான திரைப்படம். சூர்யாவின் படங்களில் பெரியார், அம்பேத்கர் படங்கள் காட்டப்படுகின்றன. சூர்யாவுக்கு 'புரட்சி நாயகன்' என்று பட்டம் கொடுக்கிறேன். ஒருநடிகன் திரையில் இருக்கும் இமேஜை சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிப்பதில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-க்கு அடுத்து என் தம்பி சூர்யா தான். மீண்டும் வில்லனாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, இயக்குநர் பாண்டிராஜ், 'நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பணிகளின் போதே இப்படம் சூர்யாவிற்கு என முடிவு செய்யப்பட்டது. இது சூர்யா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களுக்கான படம்' எனக் கூறினார்.
மேலும் பேசிய நடிகர் சூர்யா, 'எங்களின் எதற்கும் துணிந்தவர்கள் நீங்கள்தான். உங்கள் எல்லோரையும் பார்த்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அங்கு உள்ளனர். அனைவரும் பத்திரமாக வர வேண்டும். திரையரங்குகளில் படம் வெளியாவது இன்னும் சிறப்பாக உள்ளது. இது திரையரங்குகளுக்கான படம். 'காக்க காக்க' படம் பார்க்கும் போது பிரியங்கா மோகனுக்கு மூன்று வயது என்று கூறினார், அது மிக வியப்பாக இருக்கிறது.
இழப்பதற்குத் தயாராக இருந்தால் அடைவதற்கு நிறைய இருக்கின்றன. எண்ணம் போல் வாழ்க்கை. மனது சொல்வதைக்கேட்டு நடந்துகொள்ளுங்கள். தம்பிகளுக்கு இதை சொல்லத் தோன்றியது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரியின் உழைப்பு பிரமாதமானது. ஜெய்பீம் நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட படம். ஒருசிலருக்கு மனச்சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் எனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் பிரச்னை வந்தது.
அதனை மிகவும் பக்குவமாக கையாண்டனர். வாடிவாசல் ஆரம்பித்துவிட்டோம். பாலா படமும் ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து பிறகு பேசலாம்' என்றார்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.