சாதாரண டீ விற்பனையாளராக இருந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் நரேந்திர மோடி. இவரின் வாழ்க்கை வரலாறு 'பிஎம் நரேந்திர மோடி' எனும் தலைப்பில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இதில் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். படத்தை ஓமங் குமார் இயக்கிருந்தார்.
இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள், படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தன. இதனை ஏற்று இப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நவ், குழந்தை பருவத்தில் இருந்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி உயர்ந்த வாழ்க்கை கதையை ஐந்துப் பகுதிகளாக வெப் சீரிஸை எடுத்துள்ளது. இதற்கு 'Modi-Journey of a Common Man' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வெப் சீரிஸை இணையதளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஈராஸ் நவ் நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், மக்களவைத் தேர்தல் வேட்பாளராக நரேந்திர மோடி போட்டியிடுவதால், அவரது வெப் சீரிஸை ஒளிபரப்பக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.