நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியான இந்தி படம் சண்டிகர் கரே ஆஷிக்கி. இது தாதா 87 படத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அப்படத்தை இயக்கிய விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயஸ்ரீ கூறுகையில், “இந்திய சினிமாவில் முதன்முறையாகப் பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையும், உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா 87-ஐ சேரும்.
காமத்தைவிட அன்பின் வெளிப்பாடுதான் காதல் என்ற கருத்தை, உலகத்திற்குப் பதிவுசெய்த படம்தான் தாதா 87. சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும், காட்சிகளும் தாதா 87 படத்தை நினைவூட்டுவதாக என் நண்பர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான கதைக்களத்தையும், கருத்துகளையும், காட்சிகளையும் தேர்ந்தெடுத்ததற்காக சண்டிகர் கரே ஆஷிக்கி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.
இதையும் படிங்க: 'நீங்கள் சாம்பியன்தான்'- சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்