கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த 'பேட்ட' திரைப்படம் வசூல் வேட்டையாடியது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே 80களில் பார்த்த ரஜினியை திரும்பவும் திரையில் காட்டியதாக கூறினர். இப்படம் ரசிகர்களின் மனதை திருப்திபடுத்திய படம் என்று கூறப்பட்டது. 'பேட்ட' படத்திற்கு பிறகு சற்று ஓய்வில் இருந்த ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில் நடித்துவருகிறார்.
தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது. அப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்தை வைத்து ’தில்லு முல்லு’ படத்தை போன்று முழுநீள காமெடி நிறைந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்காக சிறப்பம்சம் பொருந்திய கதையை ரசிகர்கள் ரசிக்கும்படியான விதத்தில் அவர் எழுதி வருகிறாராம்.
முன்னதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்தை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டதாக பேச்சு அடிபடுகிறது. மேலும், தற்போது ’தர்பார்’ படத்தில் நடித்துவரும் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சமீபகாலமாக நடிகர் ரஜினிகாந்த் புது இயக்குநர்களின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.