தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.2) வெளியானது. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் தங்கர்பச்சான் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு முதலமைச்சராக தேர்வாகும் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஸ்டாலின் அவர்கள் கடந்து வந்த போராட்டக்களங்களைக்காட்டிலும் முதல்வராக ஆட்சி செய்யப்போகும் இனிவரும் காலங்கள் தான் மிகுந்த சவால்கள் நிறைந்தன. வெறும் கை கால்களைக் கொண்டு ஒரு பெரும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத் தலைவனின் நிலைதான் அவரது நிலை.
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பயிற்சியும், ஆளுமையும் அவருக்கு இருக்கின்றன. ஆளும் கட்சி எதைச்செய்தாலும், அதை எதிர்க்காமல் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பணியாற்றுங்கள். இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.