இயக்குநர் சுந்தர் சி நடிகர் விஷாலை வைத்து மதகஜ ராஜா, ஆம்பள, படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ. கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து சுந்தர் சி கூறுகையில், விஷால் - நான் இருவரும் 'ஆக்ஷன்' படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.
தற்போது நடிகர் விஷால் மூலம் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே 'ஆக்ஷன்' காட்சிகள் அதிகமான திரைப்படம் இதுதான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.
தொடர்ச்சியாக பேய்ப் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும்படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்.
எனக்கு, அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. 'முறைமாமன்' படத்தின் இயக்குநராக அறிமுகமானபோது அது ஒரு ரீமேக் படம்தான், ஆனால் அப்படத்தை வேறுவிதமாகக் கூறியிருந்தேன்.
“உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருந்தது.
முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் “ஆக்ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம்.
கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டார். அதற்கு விஷால் சரியாக இருப்பார் என எனக்குத் தோன்றியது. சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிச்சிருக்கார். தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.