தெலுங்கு சினிமாக்களை தமிழில் ரீமேக் செய்வது கோலிவுட் நடைமுறைகளில் ஒன்று. அப்படி ஒரு இயக்குநரும் கோலிவுட்டுக்கு அறிமுகமானார்.
ஆனால், அவர் எடுத்த ரீமேக் படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இயக்குநர் ராஜமௌலி தெலுங்கில் இயக்கிய விக்ரமர்குடு படத்தை சிறுத்தை என்ற பெயரில் ரீமேக் செய்து கோலிவுட்டில் அறிமுகமானார் இயக்குநர் சிவா.
பருத்திவீரனில் அறிமுகமாகி அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்லா போன்ற திரைப்படங்களில் கார்த்தி நடித்டிருந்த சமயம் அது. மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டுக்காக அவர் காத்திருந்தார். அந்த காத்திருப்புக்கு இயக்குநர் சிவா சிறுத்தை மூலம் நல்ல பலனை கொடுத்தார்.
சிறுத்தை மூலம் கமர்ஷியல் இயக்குநர் பெயர் வாங்கிய சிவா அடுத்ததாக அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார்.
சிவாவும் அஜித்தும்
வீரம் வெளியாவதற்கு முன்பு ஏறத்தாழ 4 படங்களில் துப்பாக்கியும் கையுமாக அஜித்தை பார்த்த அவரது ரசிகர்களுக்கே கோட் சூட், துப்பாக்கியை எப்போது துறப்பார் என்று ஏங்கி கொண்டிருக்க வீரம் படம் மூலம் அஜித்தை கிராமத்திற்கு அழைத்து வந்து அந்த ஏக்கத்தை தீர்த்தார் சிவா.
வீரம் படமும் கோலிவுட்டில் ஹிட் அடிக்க அடுத்தமுறையும் அஜித்துடன் இணைந்து வேதாளம் மூலம் அடுத்த ஹிட் கொடுத்தார் சிவா.
இதனால் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா என்று பேசப்படும் நிலை வந்தது. வேதாளத்திற்கு பிறகு விவேகம் படத்தை அஜித்தை வைத்து இயக்கினாலும் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
வீழ்ச்சியும் எழுச்சியும்
எந்த கோலிவுட் கமர்ஷியல் இயக்குநர் முத்திரை குத்தியதோ அதே கோலிவுட் சிவாவின் சறுக்கலை எள்ளி நகையாட ஆரம்பித்தது. இருப்பினும் அசராத அவர் அஜித்தை வைத்து விஸ்வாசம் என்ற மெகா ஹிட்டை கொடுத்தார்.
இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காதவிதமாக ரஜினி சிவாவுக்கு கால்ஷீட் கொடுக்க அண்ணாத்த படம் ஆரம்பமாகி விரைவில் வெளியாகவிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இதுவரை எடுத்திருக்கும் 5 படங்களில் 4 ஹிட்டுகளை கொடுத்திருக்கும் சிவா இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, HBD டைரக்டர் சிவா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.