இயக்குநர் ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாரம்'. இப்படத்தில் ராஜூ, சுகுமார் சண்முகம், சுப முத்துக்குமார், ஸ்டெல்லா கோபி, ஜெயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ப்ரியாவுடன் அர்தரா ஸ்வரூப் இணைந்து தயாரித்துள்ளார். ஜெயந்த் மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'காக்கா முட்டை', 'விசாரணை' படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது மத்திய அரசு அறிவித்த தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் திரைப்படமாக பாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன் , மிஷ்கின், ராம் , அஜயன் பாலா கமலக்கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்துகொண்டனர்.
இதில் ராம் பேசுகையில், தேசிய விருது பெறும் படங்கள் மட்டுமே நல்ல படங்கள் என்று சொல்லிவிட முடியாது. திரையரங்கில் இந்தப் படத்தை கொண்டுவர முடியுமா என கோவாவில் என்னை சந்தித்தபோது இயக்குநர் ப்ரியா கேட்டார்.
ஒரு இயக்குநர் இன்னொரு இயக்குநரின் படத்திற்கு வாழ்த்துக் கூறும் மனப்பான்மை தமிழ்நாட்டில் இருக்கிறது. 'பாரம்' படத்திற்கு தோதான காட்சி நேரமும் திரையரங்குகளும் முதல் வாரத்தில் கண்டிப்பாகக் கிடைக்காது, ரசிகர்கள் கஷ்டப்பட்டுதான் படத்தைப் பார்க்க வேண்டியிருக்கும் என்றார்.
தொடர்ந்து ப்ரியா பேசுகையில், மக்களை சென்று சேர வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுத்துள்ளோம். மும்பையைச் சேர்ந்த நான் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தமிழ் திரையுலகம் போல ஒன்றை பார்த்ததில்லை.
தமிழ்த் திரையுலகினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் ராம் இந்தப் படத்தை 2018ஆம் ஆண்டே வெளிக்கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்தார். அவரின் உதவியால் இந்த படம் இப்போது தமிழ்நாட்டில் வெளியாகவுள்ளது. தமிழ் திரை உலகம் போன்று இந்தி துறை உலகம் இல்லை. படத்திற்கு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றார்.