பி.எஃப்.எஸ். ஃபினாகில் ஃபிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் 'மயூரன்'. இப்படத்தை இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநர் நந்தன் சுப்பராயன் இயக்குகிறார். இப்படத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்த அமுதவாணன், மிஸ் ஃபெமினா வின்னர் அஸ்மிதா, வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு கூத்துப்பட்டறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மயூரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் நந்தன் கூறுகையில், 'மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன் வெற்றி புனைபவன் என்று பெயர். சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஏழை மாணவன் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் படிக்க நகரத்தை நோக்கி வருகிறான். ஒரு நள்ளிரவில் அவன் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கிப் போகும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறைக் களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.
நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், என்னும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள். சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் விநாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்னைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்படம்தான் 'மயூரன்'.
ஒரு அருமையான கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது' என தெரிவித்தார்.