2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இப்படத்தில் மதயானைக் கூட்டம் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சமுதாயத்தில் நடக்கின்ற சாதிய முரண்பாடுகளை வெளிப்படையாக எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்துக் காட்டியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஆணவக் கொலைகளை இப்படம் தோலுரித்துக் காட்டியது. இன்றைய காலக்கட்டத்தில் களையப்பட வேண்டியது சாதிரீதியில் நடக்கும் ஒடுக்குமுறைகளைத்தான் என்பதை தெள்ளத் தெளிவாக இளைய சமுதாயத்தினரிடம் இப்படம் கடத்திச் சென்றது.
வலிகள் நிறைந்த பரியன் போன்ற நண்பன் உங்கள் அருகில் இருப்பான்; அவனைக் கைவிடாதீர்கள் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் மிக அழகாக காட்சிப் படுத்தியிருந்தார். ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய சினிமா விமர்சகர்களால் உருவாக்கப்பட்ட 'CRITICS CHOICE FILM AWARDS' விருது விழா வருடந்தோறும் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா மும்பையில் நடைபெற்றது. அதில், 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் 2018ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
இந்த விருதை தயாரிப்பாளர் போனி கபூரும், நடிகை அதிதி ராவும் வழங்க படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.