சென்னை: தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை இயக்கி தனிப்பெயர் பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தயாரிப்பு, நடிப்பு, பாடகர் என அனைத்து துறைகளிலும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் "கிடார் கம்பியின் மேலே நின்று" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.
![navarasa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-navarasa-surya-script-7205221_21072021103915_2107f_1626844155_716.jpg)
‘காதல்’ உணர்வினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கமல் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், நேத்ரா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரயகா ரோஸ் மார்டினும் நடித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம் போல வருகிறாள். அவளின் குணம் நம் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலானது.
ப்ரயகா ரோஸ் மார்ட்டின் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவர் பேசும் விதம், தோற்றம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும் உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாபாத்திரத்தின் மனதோடு இணைந்தவை.
![navarasa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-navarasa-surya-script-7205221_21072021103915_2107f_1626844155_121.jpg)
அவர் இசையைப் பற்றி பேசிய விதமும் கதாபாத்திரத்துடன் இணைந்து கொண்ட விதமும் அருமையாக இருந்தது. திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
தமிழ் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகிறது.