தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என்ற சொல்லுக்கு சொந்தக்காரர். தமிழை ஆருயிராய் நேசிக்கும் தமிழ் படைப்பாளன். இயக்குநர் அவதாரத்தைத் தாண்டி தமிழ் தேசிய அரசியலில் எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்தே அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆதரித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், என் இனிய மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். தற்போதைய சூழலில் பாரதிராஜா சராசரி மனிதனாக தமிழ் தேசிய குடிமகனாக உங்களுடன் சில தகவல்களை பகிர நினைக்கிறேன். நம் தமிழ்த்தாய் மிகவும் பெருந்தன்மை கொண்டவள். பெற்ற மகனை பாலூட்டி வளர்த்தாள். தமிழ்நாட்டிற்கு பிழைப்புத் தேடி வருபவர்களை அன்போடு ஆதரித்தாள். நலமுடன் வைத்திருக்கிறாள். அப்படிப்பட்ட நம் பெருந்தாயை சிலர் சிதைக்க நினைக்கின்றனர். ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்.
அதை ஒருபோதும் நிகழ்த்த விடக் கூடாது. தமிழை தமிழ்தான் ஆள வேண்டும். ஒரு பச்சைத் தமிழன்தான் ஆள வேண்டும் என ஆழமாக உறுதிப்படுத்துகிறேன். எனது தமிழ் தேசிய அரசியல் தற்போது வந்ததல்ல... எம்ஜிஆர் காலகட்டத்திலேயே உதித்துவிட்டது. நான் மதிக்கும் பெரும் தலைவன் எம்ஜிஆர். தமிழ் ஈழ மக்களின் உயிரை காக்க போராடினார் தமிழ் தேசிய தலைவன் என்றால் அது எம்ஜிஆர்தான். ஆனால், தற்போது நமக்காக ஒருவன் தனது உயிரைக் கொடுத்து கத்திக்கொண்டிருக்கிறான் அதை மறந்துவிடாதீர்கள். நான் தமிழன் என்று சொன்னால் கோபம் வரும்.
தமிழ்நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியல் செய்யட்டும் தொழில் புரியட்டும், ஆனால் தமிழன்தான் தலைவனாக வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ளது போல இந்த தமிழ் மண்ணை இந்த மண்ணின் மைந்தன்தான் ஆள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.