சென்னை: சந்தானம் நடித்து 31ஆம் தேதி தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சர்வர் சுந்தரம், டகால்டி படம் பிரச்னை இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூடிப்பேசி சுமூக முடிவுக்கு வந்தது.
சந்தானம் நடிப்பில் உருவான இந்த இரு படங்களும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு ஹீரோவின் இரு படங்கள் ஒரே நாளில் வெளிவருவதால் வசூலில் ஏதாவது ஒரு படத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பிரச்னை எழுந்தது. இதைத்தொடர்ந்து 'டகால்டி' படத்துக்கு வழிவிட்டு சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பேசி முடிவு செய்யப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:
டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் கத்தியை தூக்கிக்கொண்டு சண்டை போட்டார்கள். நாங்கள் பேசியவுடன் கத்தியை கீழே போட்டுவிட்டார்கள். பின்னர் எங்களுக்குத்தான் தலைவலி. யார் கையில் கத்தியை கொடுப்பது (யார் படத்தை வெளியீடு முதலில் செய்வது).
இரு படத்துக்கும் ஒரே கதாநாயகன். அதே சமயம் படத்தை வெளியிடும் சூழ்நிலையிலும் தயாரிப்பாளர்கள் இருந்தனர். இவர்கள் இருவரின் தரப்பிலும் நியாயம் உள்ளது.
எனக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த படத்தை வரும் 31ஆம் தேதி நாகேஷ் நினைவு நாளன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தயாரிப்பாளரின் நலன் கருதி இந்தப் படம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
நாகேஷ் நடித்த படம் 'சர்வர் சுந்தரம்' மீது எனக்கு காதல். அவர் நடித்த 'சர்வர் சுந்தரம்' படம் ரிலீஸாவதற்கு முன்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது நான் எனது நண்பர் மூலமாக அந்தப் படத்தை பார்க்க சென்றேன். முதன்முறையாக ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நான் பார்த்த படம் சர்வர் சுந்தரம்.
படம் தொடங்கி சிறிது நேரத்தில் ஒருவர் டார்ச்லைடுடன் வந்து என் சட்டையை பிடித்து என்னை இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டார். அப்போது இந்த ஸ்டூடியோவுக்குள் நான் ஒரு நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ மீண்டும் வருவேன் என்று கண்ணீர் மல்க சபதம் செய்துவிட்டு சென்றேன்.
அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து புதுமைப்பெண் படத்தை இயக்க இதே ஏவிஎம் நிறுவனம் என்னை அழைத்தது. அப்போது ஏவிஎம் சரவணனிடம் இதை கூறினேன். அவர் சிரித்தார்.
டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் 100 ரூபாய் கிடைக்கும் இடத்தில் ஆளுக்கு 50 ரூபாய்தான் கிடைக்கும் என்றேன். இரு படத்தின் தயாரிப்பாளர்கள் இதனைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வெளியீட்டுத் தேதியை மாற்றினர் .
தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டி எதை சாதித்ததோ இல்லையோ, இப்போது இதை சாதித்துள்ளது. விரைவில் ஒரு தேர்தல் நடத்தி இதை போல் நிறைய சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.