சென்னை அண்ணா சாலையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின் அச்சங்கத்தின் தலைவர் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரின் வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாரதிராஜா, வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, ஆயிரம் பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள் என்றார்.
பாரதிராஜா நோஞ்சான்கள் எனக் கூறியது திரையுலகினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாரதிராஜா மன்னிப்பு கோர வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்தனர். பின் இது குறித்து பாரதிராஜாவும் மன்னிப்பு கோரினார்.
இது குறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் சிவா விடுத்துள்ள அறிக்கையில், இயக்குநர், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவை விமர்சித்து சில பதிவுகள் வந்தன. குறிப்பாக 'நோஞ்சான்' என்ற வார்த்தை பிரயோகத்தைத் தவறாக மற்ற சங்கத்தினர் குறிப்பிட்டு விட்டார் என்ற குரல்கள் எழுந்தன. அவரை தெரிந்தவர்களுக்கும், அவரிடம் பழகியவர்களுக்கும், அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் தெரியும் பாரதிராஜா ஒரு நேர்மையான அக்னி மனதுக்காரர் என்று.
எங்கெல்லாம் சினிமாவுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கின்றதோ, அப்பாவி சினிமா துறையினர் பாதிக்கப்படுகிறார்களோ, அறியாமையில் சினிமா வியாபாரம் களவு போகின்றதோ, எங்கெல்லாம் சினிமா தயாரிப்பாளர்கள் நசுக்கப்படுகிறார்களோ, அங்கு அவரின் குரல் உயர்ந்திருக்கிறது. தனது துறையின் மற்ற நண்பர்களுக்காக அவருடைய ஆதரவுக் கரம் எப்போதுமே நீண்டு அரவணைத்திருக்கிறது. இப்போதும் அதுதான் நிகழ்ந்தது. நோஞ்சான் என்பது வலிவற்றவர்களின் குரலற்ற நிலையினை சுட்டிக் காட்டுவது. அவர் எப்போதுமே யாரையும் நையாண்டி செய்ததில்லை.
சிறுபட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வியாபாரம் செய்ய வழி தெரியாமல், வியாபார விவரங்கள் பிடிபடாமல், எப்படி தியேட்டருக்கு படத்தைக் கொண்டு செல்வது என்ற விவரம் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையை கண்டு எத்தனை இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஃபெஸ்டிவல் நேரங்களில் சிறிய படங்களை மட்டுமே திரையிட வேண்டும், மற்ற நேரங்களில் பெரிய நடிகர்களின் படங்களைத் திரையிட்டால் சிறிய படங்கள் பிழைத்துக் கொள்ளும், பெரிய படங்களும் குறைவில்லாமல் ஓடும், திரையரங்குகளும் நல்ல லாபம் ஈட்டும் என்பதை முதன்முதலில் சொன்னதே இவர்தான்.
எந்தச் சங்கமும் அவருக்குத் தேவையில்லை. ஆனால், சங்கத்திற்குத்தான் அவர் தேவை. இதைப் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் ஒரு சிலரும் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் ஒன்றுகூடி பாரதிராஜா என்ற கலைஞனுடன் ஒன்றிணைந்து நமக்கான வியாபாரத்தை உறுதிப்படுத்துவோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.