தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளாராக இருந்துவருபவர் நரேஷ் கோத்தாரி. இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ”பொட்டு, சௌகார்பேட்டை போன்ற திரைப்படங்களை இயக்கிய வடிவுடையான் என்பவர் என்னைச் சந்தித்து விஷாலிடம் தான் கால்ஷீட் வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அந்தத் திரைப்படத்தை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கவுள்ளதாகவும், இதனால் படத்தை தயாரிக்குமாறும் என்னிடம் கேட்டார்.
விஷாலிடம் கால்ஷீட் வாங்கிய ஆவணங்களையும் அவர் காண்பித்தார். அதனை நம்பி வடிவுடையானிடம் மூன்று தவணைகளில் சுமார் 47 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தினேன். பின்னர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கியதாக பொய்யான ஆவணங்களை என்னிடம் காட்டி ஏமாற்றியது எனக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவுடையானை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று பண மோசடி வழக்குபதிவின் கீழ் வடிவுடையானை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: ஒகேனக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரம்